Header Ads

  • BREAKING



    விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் ரூ 65 லட்சம் மோசடி: மூன்று பேருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பு.

    இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனத்தின் சென்னைக் கிளையில் பயிர்க்காப்பீடு செய்தவர்களின் பிரீமியம் கட்டணம் ரூ.65 லட்சத்தை மோசடி செய்த மூவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மத்திய அரசு நிறுவனமான இந்திய பயிர்க் காப்பீட்டு நிறுவனத்தின் சென்னை கிளையில் பயிர்க் காப்பீடு செய்து விவசாயிகள் அதற்கான பிரீமியம் கட்டணத்தை வங்கி வரைவோலையாக அனுப்பி வைத்தனர்.

    இந்த வரைவோலையை, இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பதிவறை எழுத்தர் ஜி. சக்கரபாணி சட்ட விரோதமாக திருடினார்.

    பின்னர், இந்த காசோலைகளை போலியான ஆவணம் மூலம் நிறுவனத்தின் பெயரில் வங்கியில் போலியான கணக்கு தொடங்கி கல்யாணசுந்தரம் மற்றும் எம்.சாலை குணதங்கம் ஆகியோருடன் சேர்ந்து கையாடல் செய்தார்.

    சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் அனுப்பிய 15 வரைவோலைகள் மோசடி செய்யப்பட்டன.

    இந்த காசோலைகளின் மொத்த மதிப்பு ரூ.65 லட்சத்து 2,832 ஆகும். இந்த மோசடி பற்றி தெரிய வந்ததும், நிறுவனத்தின் மண்டல மேலாளர் சி. அன்பரசு, மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.) அதிகாரிகளிடம் புகார் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் குற்றவாளிகள் மூவரையும் கைது செய்தனர்.

    சென்னையில் உள்ள சிபிஐ. நீதிமன்றத்தில், இந்த வழக்கு 2010-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இறுதி விசாரணைக்கு பின்னர், இந்த வழக்கில் 12-ஆவது கூடுதல் சிபிஐ. நீதிபதி. எஸ்.ஜவகர், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தண்டனையை உறுதி செய்தார்.

    குற்றம் சாட்டப்பட்ட ஜி. சக்கரபாணிக்கு 4 ஆண்டு சிறை தண்டணை மற்றும் ரூ.3 ஆயிரமும், சாலை குணதங்கத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 18 ஆயிரம் அபராதமும், கல்யாண சுந்தரத்துக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 7 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad