Header Ads

  • BREAKING



    அதிமுக ஆட்சிக்கு எதிராக ஓபிஎஸ்-திமுக மறைமுக உறவு: எம்பி முத்துக்கருப்பன் பேட்டி.

    அதிமுக ஆட்சிக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் அணிக்கும், திமுக-வுக்கும் இடையே மறைமுக உறவு இருப்பதாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். முத்துக்கருப்பன் குற்றம் சுமத்தினார்.

    இந்த சூழலில் அதிமுக-வின் உண்மை தொண்டர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னம் இருக்கும் இடத்தில் அணி திரள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:

    அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் மறைவு என்பது அதிமுக பேரியக்கத்துககும், தமிழகத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த சசிகலா தேர்வு செய்யப்பட்டார். 

    சசிகலா பதவியேற்பு விழாவுக்காக சென்னைக்கு நான் வந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தேன். பின்னர், திருநெல்வேலிக்கு வந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். இந்த சூழலில் தமிழக அரசியலிலும், அதிமுக-விலும் பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. இதில், அதிமுக தொண்டர்கள் உண்மையை உணர வேண்டும்.

    எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, ஜானகி அணி தரப்பில் திமுக-வின் ஆதரவை நாடி சென்றதாலேயே ஜானகி அணி தோல்வியைத் தழுவியது. மேலும், எம்ஜிஆரின் புகழ் நிலைத்து நிற்க வேண்டுமெனில் அதிமுக என்ற கட்சி நிலைத்து நிற்க வேண்டும் என்ற விருப்பத்தின்பேரிலும், பெரும்பாலான மக்கள் ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவு அளிப்பதை உணர்ந்தும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக-வை பலப்படுத்த ஜானகி உத்தரவிட்டார். அப்போது, ஜானகி அணியின் சார்பில், திருநெல்வேலி மாவட்ட செயலராக நான் இருந்தேன். அப்போது, அந்த அணி செய்த தவறைத்தான் இப்போது, ஓ. பன்னீர்செல்வம் செய்துள்ளார்.

    திமுக-வுடன் மறைமுக ஆதரவு வைத்துக் கொண்டு அதிமுக ஆட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். சட்டப் பேரவையில் பெரும்பான்மை கிடைக்காமல் அதிமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டால், அதற்கு அடுத்த பெரும்பான்மை உள்ள திமுக-வை மட்டுமே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார். 10, 15 எம்எல்ஏ-க்கள் உள்ள ஓ.பன்னீர்செல்வம் அணியை அழைக்கமாட்டார்.

    கட்சியிலும், ஆட்சியிலும் அனுபவமிக்க ஓ.பி.எஸ். அணிக்கு இது நன்றாகவே தெரியும். இருப்பினும், திமுக-வுடன் உறவை தொடர்வது கண்டனத்துக்குரியது. அதிமுக-வின் முதல் எதிரியே திமுக மட்டுமே. திமுக என்பது தீய சக்தி, அது ஊழல் கட்சி என குற்றம் சுமத்தியே அதிமுக-வை தொடங்கினார் எம்ஜிஆர். அவரது வழியில் ஜெயலலிதாவும் தொடர்ந்து திமுக எதிர்ப்பை இம்மியளவும் விலகாமல் தொடர்ந்து வந்தார். ஆனால், ஓ. பன்னீர்செல்வம். 1988இல் ஜானகி அணி செய்த தவறைப் போல திமுக-வின் ஆதரவைப் பெற்று கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார்.

    அதிமுக-வின் உண்மைத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் இரட்டை இலை சின்னத்தின் பின்னாலும், அதிமுக என்ற கட்சியின் பின்னாலும் அணி வகுக்க வேண்டும். எந்தவித பூசலுக்கும் இடம் அளிக்கக் கூடாது. எம்ஜிஆர், ஜெயலலிதா புகழ் நிலைத்து நிற்க வேண்டுமெனில் அதிமுக என்ற கட்சியும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்த நிற்க வேண்டும். அதற்கு சசிகலா தலைமைக்கு பலம் சேர்க்க வேண்டும்.

    சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலாவை, பெரும்பான்மை பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்த பிறகும், அவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆளுநர் காலதாமதம் செய்தார். பெரும்பான்மை உறுப்பினர்கள் தேர்வு செய்த கட்சித் தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்ட விதியாகும். ஆளுநர் என்பவர் மத்திய அரசின் முகவராக மட்டுமே செயல்பட்டார்.

    நீதிமன்ற தீர்ப்பு வரும் முன்னரே, தீர்ப்பு இப்படிதான் இருக்கும் என மத்திய அரசு தெரிந்து வைத்து, அதனை ஆளுநர் மூலம் செயல்படுத்தியுள்ளது. இப்போதும், அதிமுக ஆட்சிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மத்திய அமைச்சராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன், எடப்படி பழனிசாமி நாற்காலி தாற்காலிகமானது என கூறி வருகிறார்.

    எனவே, அதிமுக ஆட்சிக்கு எதிராக மத்தியில் ஆளும் பாஜக-வும், தமிழகத்தில் திமுக-வும் தொடர்ந்து சதி செய்து வருகிறது. இந்த நடவடிக்கையை அதிமுக-வின் உண்மை தொண்டர்கள் உணர்ந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad