Header Ads

  • BREAKING



    ஈரானை மிரட்டும் வகையில் பேச வேண்டாம்': அதிபர் ரெளஹானி எச்சரிக்கை.

    ஈரானை மிரட்டும் வகையில் யாரும் பேச வேண்டாம் என்று அந்நாட்டு அதிபர் ஹஸன் ரெளஹானி எச்சரிக்கை விடுத்தார்.
    ஈரான் புரட்சி தினத்தை முன்னிட்டு, தலைநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியில் பேசியபோது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
    ஈரானில் 1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டதன் நினைவாக தலைநகர் டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை மாபெரும் பேரணி நடைபெற்றது. அதையொட்டி சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிபர் ஹஸன் ரெளஹானி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
    புதிதாகப் பதவி ஏற்றவர்கள் சில கடுமையான கருத்துகளை வெளியிட்டிருக்கின்றனர். பொய்யான தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர். ஈரானை மிரட்டும் வகையில் யாரும் பேச வேண்டாம். நம் நாட்டை மிரட்டிப் பேசுபவர்கள், பின்னால் அதற்காக வருத்தப்பட வேண்டியிருக்கும். இங்கே லட்சக்கணக்கில் கூடியிருக்கும் மக்கள் கூட்டமே அவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று அதிபர் ஹஸன் ரெளஹானி கூறினார். 
    உலக அமைதிக்கு ஈரான் அச்சுறுத்தலாகத் திகழ்கிறது என்றும், அந்த நாட்டின் அணுசக்தி பரிசோதனைகளை முற்றிலுமாக முடக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.
    மேலும், ஈரான் மீது வல்லரசு நாடுகள் முன்னர் விதித்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறி வருகிறார்.
    இந்த நிலையில், ஈரானை மிரட்டும் வகையில் யாரும் பேச வேண்டாம் என்று ஹஸன் ரெளஹானி எச்சரித்திருக்கிறார். இதன் மூலம், அவர் அமெரிக்காவை மறைமுகமாகத் தாக்கியுள்ளார்.

    ஈரான் புரட்சி தினம்: நாடெங்கும் கொண்டாட்டம் 
    பேரணிகள், சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ஈரான் புரட்சி தினம் நாடெங்கும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
    ஈரானில் அயதுல்லா கொமேனி தலைமையில் 1979-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து பெஹலவி வம்சத்தினரின் மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப்பட்டது. இதையொட்டி ஈரானில் ஆண்டுதோறும் பிப்ரவரி 11-ஆம் தேதி புரட்சி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
    இந்நிலையில், 38-ஆவது புரட்சி தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது. எனினும் முன்னதாகவே வெள்ளிக்கிழமை பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தலைநகர் டெஹ்ரான் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பேரணிகள், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெற்றன.
    பேரணிகளில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    நாடெங்கும் கடும் குளிர் நிலவி வருகிறது. பல இடங்களில் வெப்ப நிலை பூஜ்யம் டிகிரி செல்ஷியஸுக்கும் குறைவாக, உறை பனி நிலை பதிவானது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல், மக்கள் திரளாக வந்து புரட்சி தின பேரணிகளில் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad