Header Ads

  • BREAKING



    துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலையீடு குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார்?

    புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலையீடு குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இன்று அமைச்சர்கள் குழு முறையிட்டதாகத் தெரிகிறது.

    புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

    முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. இந்நிலையில் அரசு நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடுகிறார் என அவ்வப்போது மெலிதான புகார்கள் எழுந்தன.

    அரசு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவுகள் பிறப்பிக்கிறார், மக்கள் பிரதிநிதிகளை மதிப்பதில்லை என அரசியல் கட்சிகள் புகார்கள் கூறின. மேலும் தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரம் தூர்வாரம் பணியில் தாமதம் ஏற்பட்டு, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கு ஆளுநர் கிரண்பேடி செயல்பாடு தான் காரணம் என நேரடியாக அமைச்சர் கந்தசாமி குற்றம் சாட்டினார்.

    துறைமுகத்தை தூர்வாரும் பணியை மத்திய அரசு நிறுவனத்திடம் வழங்க ஆளுநர் நேரடியாக உத்தரவிட்டார். ஆனால் அந்நிறுவனம் தாமதமாக பணியை மேற்கொண்டதால் ரூ.25 கோடி வரை அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்புக்கு ஆளுநரே காரணம் என புகார்கள் கூறப்பட்டன.
    இதுகுறித்து முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டபோது, எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. அவரவர் சட்ட வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறோம் என பதில் கூறினார்.
    காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குழுவும் நேரடியாக ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிட்டால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு புகார் கடிதம் அனுப்பியது. இதே போல் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநர் செயல்பாடுகளை குறை கூறின.
    அரசு நிர்வாகத்தில் பல்வேறு கோப்புகளை ஆளுநர் பார்வைக்கு அனுப்பினால் அவர் ஒப்புதல் தராமல் குறிப்பு மட்டும் எழுதி, மத்திய உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என அனுப்பி விடுகிறார். இதனால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசிடம் கூடுதல் நிதியைப் பெற ஆளுநர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் திட்டங்கள் தேக்கம் அடைந்து வருகின்றன என காங்கிரஸ் அமைச்சர்கள் வெளிப்படையாக புகார் கூறி வருகின்றனர்.

    குடியரசுத் தலைவரிடம் புகார்?
    இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி, கந்தசாமி, ஷாஜஹான், கமலக்கண்ணன் ஆகியோர் கொண்ட குழு தில்லி சென்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரடியாக சந்தித்துப் பேசியது.
    அரசு நிர்வாகத்தில் ஆளுநர் கிரண்பேடியின் தலையீடு குறித்தும், இதனால் நலத்திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் நேரடியாக குடியரசுத் தலைவரிடம் முறையிட்டதாகலும், ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad