Header Ads

  • BREAKING



    ஊழல் வழக்கில் சாம்சங் துணைத் தலைவர் கைது.

    தென் கொரிய அதிபரைப் பதவி நீக்கம் செய்ய வித்திட்ட ஊழல் வழக்கு தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில் சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் லீ ஜே-யோங் (48) கைது செய்யப்பட்டார்.
    தென் கொரிய அதிபராக இருந்த பார்க் கியூன்-ஹையின் நெருங்கிய தோழி, அவரது நட்பைத் தவறாகப் பயன்படுத்தி, சாம்சங், ஹுண்டாய் உள்ளிட்ட பிரபல தென் கொரிய பெருநிறுவனங்களிடம் ரூ. 500 கோடிக்கும் மேலாக நிதி திரட்டினார் என்றும், முக்கிய அரசு நியமனங்களில் தலையிட்டார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. நிதி மோசடி உள்ளிட்ட புகார்களின் பேரில் சோய் சூன்-சில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
    இந்த விவகாரத்தில் அதிபர் பார்க் கியூன்-ஹை அந்நாட்டு நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 
    பல்வேறு நிலைகளில் ஊழல் விவகாரம் பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.
    தென் கொரிய அரசியலைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள அந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவரிடம் அரசு வழக்குரைஞர் கடந்த மாதம் 12-ஆம் தேதி 22 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தார்.
    தொடர்ந்து பல முறை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
    இந்த நிலையில், அவரைக் கைது செய்வதற்குப் போதுமான ஆதாரம் இருப்பதாகக் கூறி அதற்கான உத்தரவை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்தது. தொடர்ந்து, லீ ஜே-யோங் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    தென் கொரியாவின் மிகப் பெரிய நிறுவனமான சாம்சங்கின் உரிமையாளர் லீ குன்-ஹீ உடல் நலக் குறைவால் பணியிலிருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், உலகளாவிய அந்த நிறுவனத்தை அவரது மகன் லீ ஜே-யோங் நிர்வகித்து வருகிறார்.
    அவரது கைது நடவடிக்கை சாம்சங் நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல், தென் கொரியாவின் தொழில் துறைக்கும் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
    தென் கொரியாவின் பொருளாதாரத்தில் சாம்சங் நிறுவனத்தின் பங்களிப்பு சுமார் 20 சதவீதம் என்று கூறப்படுகிறது. செல்லிடப்பேசி தயாரிப்பில் உலகில் முதலிடம் வகிக்கிறது சாம்சங்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad