சென்னை துறைமுகம் வந்தது வங்கதேச கடலோரக் காவல்படை கப்பல்.
வங்கதேசத்தின் கடலோரக் காவல்படை கப்பலான "தாஜூதீன்' செவ்வாய்க்கிழமை சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இந்தியக் கடலோரக் காவல்படை டி.ஜ.ஜி. செளகான் தலைமையிலான இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் இந்த கப்பலை வரவேற்றனர்.
நல்லெண்ணம் வளர்த்தல், பாதுகாப்பு தொழில்நுட்ப உத்திகளை பரிமாறுதல் ஆகியவற்றின் அடிப்படையில், வங்கதேச கடலோரக் காவல்படையினர், தாஜூதீன் என்ற ரோந்து கப்பலில் செவ்வாய்க்
கிழமை சென்னை வந்தடைந்தனர்.
இந்தக் கப்பலின் கேப்டன் தாரிக் அகமது தலைமையிலான வீரர்களை, இந்தியக் கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய டி.ஐ.ஜி. செளகான் வரவேற்றார். பின்னர் இரு நாட்டு கடலோரக் காவல் படையின் முக்கிய அதிகாரிகள் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டனர்.
தாஜூதீன் வரும் வெள்ளிக்கிழமை வரை சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்திய கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பலான "பகீரதர்' இங்குள்ள சிறப்பு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு கப்பல்களையும் இரு நாட்டு வீரர்களும் பார்வையிடுகின்றனர்.
பின்னர் கடல்சார் மீட்பு மையத்தை வங்கதேச வீரர்கள் பார்வையிடுகின்றனர்.
அப்போது கலந்துரையாடல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கைப்பந்து போட்டியும் நடைபெறுகிறது. வரும் வெள்ளிக்கிழமை இரவு வங்கதேச வீரர்கள், தங்கள் தாய்நாடு திரும்புகின்றனர் என கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை