Header Ads

  • BREAKING



    சென்னை கடலில் எண்ணெய் கசிவு விவகாரம்: இழப்பீடு கோரிய மனு தென்னக கிளைக்கு மாற்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.

    சென்னை கடலில் எண்ணெய் கசிவு படலம் தீவிரம் அடைந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னையில் உள்ள தனது தென்னகக் கிளைக்கு மாற்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
    இந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுக்கள் தீர்ப்பாயத்தின் தலைவரும் நீதிபதியுமான ஸ்வதேந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
    எண்ணெய் கசிவு விவகாரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிக்க தீர்ப்பாயம் விரும்பினாலும், இதே கோரிக்கை தொடர்புடைய மனுக்களை ஏற்கெனவே தீர்ப்பாயத்தின் தென்னகக் கிளை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. அவற்றின் மீதான விசாரணை வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறும் என பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுக்களையும் தென்னகக் கிளை விசாரணைக்கு மாற்ற உத்தரவிடுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
    மேற்கண்ட விவகாரத்தில் இரு மனுக்கள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரு மனுவில் "சென்னை கடலில் எண்ணெய் கசிவு படலம் தீவிரமான விவகாரத்தில் கடல் வாழ் உயிரினங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை மதிப்பிட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
    மற்றொரு மனுவில், "எண்ணெய் கசிவு விவகாரத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதைச் சமாளிக்கக் கூடிய தேசிய மற்றும் சர்வதேச பேரிடர் நடைமுறை பின்பற்றப்படவில்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    இந்த மனுக்கள் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த போது அது தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad