Header Ads

  • BREAKING



    விரைவில் புதிய குடியேற்றத் தடை சட்டம்': அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.

    வெளிநாடுகளிலிருந்து முஸ்லிம்கள் அமெரிக்காவில் குடியேறுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகப் புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
    முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 7 நாடுகளிலிருந்து அமெரிக்கா வருவதற்குத் தாற்காலிகத் தடை விதித்து டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து, அதிபரின் உத்தரவுக்கு மாகாண முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அந்த இடைக்காலத் தடை உத்தரவை விலக்க வேண்டும் என்று அமெரிக்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
    இந்த நிலையில், குடியேற்றத் தடை தொடர்பாக புதிய சட்டத்தை விரைவில் இயற்றப் போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். 
    தலைநகர் வாஷிங்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
    ஏற்கெனவே வெளியான ஆணை மீது நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்துள்ளது அது நீதிமன்றம் எடுத்த தவறான முடிவாகும். அதனைக் கருத்தில் கொண்டு, குடியேற்றம் தொடர்பாக மேலும் கடுமையான புதிய சட்டத்தை விரைவில் அறிவிப்பேன்.
    குடியேற்றம் தொடர்பாக அரசு எடுத்த முடிவு சரியானது. அந்த முடிவில் தொடர்ந்து உறுதியாக இருப்போம். நமது நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் முன்னிட்டு விரிவான புதிய குடியேற்ற சட்டம் இயற்றப்படும்.
    நாட்டின் மிகச் சிறந்த வழக்கறிஞர்கள் வரைவு சட்டத்தை இயற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த நடவடிக்கை விரைவிலேயே நிறைவடையும் என்று கருதுகிறேன்.
    நாட்டின் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, நீதிமன்றத்தின் முடிவு மிகவும் மோசமானது.
    மீண்டும் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாத வகையில் புதிய சட்டம் அமையும் என்றார் அவர். குடியேற்றக் கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய சட்டம் அடுத்த வாரமே வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
    ஈரான், இராக், யேமன், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு 90 நாள்கள் தடை விதித்து அதிபர் டிரம்ப் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.
    மேலும், அந்த நாடுகளிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கு 120 நாள்களும், சிரியா நாட்டு அகதிகளுக்கு மட்டும் காலவரையறையின்றியும் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டது.
    இது உலகெங்கும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அமெரிக்காவில் இதை எதிர்த்து பல்வேறு மாகாண அரசுகள், நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்ததையடுத்து, அதிபர் உத்தரவுக்கு இடைக் காலத் தடை விதிக்கப்பட்டது.
    மேல் முறையீடு வாபஸ்
    முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 7 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் வர தாற்காலிமாகத் தடை விதிக்கும் அதிபர் டிரம்ப்பின் குடியேற்ற ஆணைக்கு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடைக்கு எதிராக அரசு அளித்திருந்த மேல் முறையீட்டு மனுவைத் திரும்பப் பெறுவதாக சட்டத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
    தடைக்கு எதிரான அரசின் முறையீட்டை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
    இந்நிலையில், முறையீட்டைத் திரும்பப் பெறுவதாக அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
    தொடர்ந்து வழக்கு நடத்துவதைவிடுத்து, அந்த உத்தரவை ரத்து செய்ய அதிபர் திட்டமிட்டுள்ளார். விரைவில் புதிய உத்தரவை அதிபர் வெளியிடுவார். இடைக்கால உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்த தவறான கவலைகளைக் கருத்தில் கொண்டு புதிய மாற்று சட்டம் இயற்றப்படும் என்று அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.

    "ரஷியாவுடன் ரகசியத் தொடர்பு: ஊடகங்கள் பொய் பிரசாரம்' 
    ரஷியாவுடன் நல்லுறவு நிலவுவதையே அமெரிக்கா விரும்புகிறது; ஆனால் எனக்கு அந்நாட்டுடன் ரகசியத் தொடர்பு இருக்கிறது என்று ஊடகங்கள் பொய் பிரசாரம் செய்கின்றன என்று டிரம்ப் தெரிவித்தார்.
    வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷிய உறவு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:
    ரஷியாவுடன் சுமுகமான உறவு இருப்பதையே நான் விரும்புகிறேன். அமெரிக்கா - ரஷியா இடையே நல்லுறவு நிலவ வேண்டும். இரு நாடுகளுமே அணு ஆயுதத் திறன் கொண்ட வல்லரசுகள். எனவே நல்லுறவு இருப்பது உலக நாடுகளுக்கே நன்மை பயக்கும் என்றார்.
    ரஷிய அதிபர் புதின் உங்கள் மன உறுதியை சோதிக்கிறாரா என்று டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்: "நான் அப்படி நினைக்கவில்லை. என்னுடன் எளிதாக உடன்படிக்கை ஏற்படுத்திவிட முடியும் என்று புதின் கருதவில்லை என்று நினைக்கிறேன்.
    அமெரிக்கா - ரஷியா இடையே சுலபமாக உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டால் அது அரசியல்வாதி என்கிற முறையில் ஒருவருடைய தோல்வியாகச் சிலர் கருத இடமிருக்கிறது. ஆனால் வலுவான அணு சக்தி நாடுகள் என்ற முறையில் நல்லுறவு நிலவுவது அவசியம்.
    ஊடகங்களில் வரும் தவறான பிரசாரத்தால் இரு நாடுகள் இடையே உடன்படிக்கை ஏற்படாமல் போகிறது. எனக்கு ரஷியாவுடன் ரகசியத் தொடர்பு உள்ளது என்ற பொய் செய்தி திரும்பத் திரும்ப வெளியாகிறது. அங்கு யாருடனும் எனக்குத் தொடர்பில்லை. அதிபர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு புதின் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். பதவியேற்ற பிறகு மீண்டும் ஒரு முறை தொலைபேசியில் அவர் அழைத்து வாழ்த்தியபோது அவருடன் பேசினேன்' என்றார் டிரம்ப்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad