Header Ads

  • BREAKING



    எம்.எல்.ஏ.க்களிடம் மிரட்டி கையெழுத்து வாங்கியதாக புகார்: அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீசார் விசாரணை.

    அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் மிரட்டி கையெழுத்து வாங்கிதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக,தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்னை போலீஸர் விசாரணை செய்தனர். இது குறித்த விவரம்:

    தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வி.கே. சசிகலா தலைமையில் ஒரு அணியும், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு அணியும் செயல்படுகிறது. இதில் கடந்த 8-ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

    எம்.எல்.ஏ.க்களிடம் மிரட்டி கையெழுத்து:

    இந்தக் கூட்டத்துக்கு பின்னர் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் 3 பேருந்துகளில் ஏற்றப்பட்டு, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், மாமல்லபுரம் அருகே கூவத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

    இதில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் பேருந்தில் ஏறும்போது, அங்கிருந்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியேறிவிட்டார். இந்நிலையில் அவர், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஒரு புகார் மனு அளித்தார்.அந்த புகார் மனுவில்,எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் அங்குள்ளவர்கள் மிரட்டி வெள்ளை காகிதத்தில் கையெழுத்தி வாங்கினர் என குறிப்பிட்டிருந்தார்.

    அமைச்சரிடம் விசாரணை:

    அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார்.இதையடுத்து ஒரு துணை ஆணையர் தலைமையிலான போலீஸர்,எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு விசாரணை செய்ய அவர் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றனர்.அங்கிருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீஸர், முதல் கட்ட விசாரணை செய்தனர்.

    இதில் எடப்பாடி பழனிச்சாமி, எம்.எல்.ஏ.க்களிடம் மிரட்டி கையெழுத்து வாங்கவில்லை என கூறியதாக தெரிகிறது. சுமார் அரைமணி நேரம் இந்த விசாரணை நீடித்தது. முதல் கட்ட விசாரணையை முடித்த போலீஸர்,அங்கிருந்து திரும்பி வந்தனர்.

    மேலும் இந்த புகார் தொடர்பாக, சேப்பாக்கம் எம்.எல்.ஏ.விடுதியில் உள்ள ஒரு அதிகாரியிடமும் போலீஸர் விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இப் புகார் தொடர்பாக சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசித்து,அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad