சொகுசு விடுதியில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள்: தமிழகத்தைப் பின்பற்றும் நாகாலாந்து.
தமிழகத்தை போலவே நாகாலாந்தில் ஆளுங்கட்சி எம் எல் ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நாகாலாந்தில் டி.ஆர்.ஜெலியாங் தலைமையிலான நாகாலந்து ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. மொத்தமுள்ள 60 உறுப்பினர்களில் 49 பேரின் ஆதரவு இந்த கூட்டணிக்கு இருக்கிறது. இதில் 40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாகா மக்கள் முன்னணி (NPF) கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்தசூழலில், பெண்களுக்கு தேர்தலில் அளிக்கப்படும் இடஒதுக்கீடுக்கு எதிராக நடந்துவரும் மக்கள் போராட்டங்களை கையாளத் தவறிவிட்டதாகக் கூறி டி.ஆர்.ஜெலியாங் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும், என்பிஎஃப் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் நிபியூ ரியோவை முதலமைச்சராக்க வேண்டும் என்றும் எம்எல்ஏக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாநிலத்தை விட்டு வெளியேறி அசாமின் காசிரங்கா சரணாலயம் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியுள்ள சொகுசுவிடுதிக்கு வந்த ரியோ, 7 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க முடிவு செய்த அரசின் அறிவிப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் பழங்குடியின மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் திமாபூரில் நடந்த போராட்டத்தின்போது பழங்குடியின இளைஞர்கள் 2 பேர் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் போராட்டம் தீவிரமடைந்தது.
கருத்துகள் இல்லை