Header Ads

  • BREAKING



    சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு சீரான கல்விக் கட்டணம் நிர்ணயிக்க வலியுறுத்தல்.

    நாடு முழுவதும் உள்ள சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரே சீரான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
    தில்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் தனியார் சுயநிதிப் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அகில இந்திய கூட்டமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அகில இந்திய அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
    இதைத் தொடர்ந்து, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைமைப் புரவலர் ஆர்.எஸ். முனிரத்தினம், பொதுச் செயலர் கே.வி.கே. ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
    நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகள் அனைத்தும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் (ஏஐசிடிஇ) கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. வெவ்வேறு மாநிலங்களில் உள்ள சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கான கூட்டமைப்பு செயல்பட்டு வருகின்றன. எனினும், இக்கல்லூரிகளின் கோரிக்கைளை ஏஐசிடிஇ மற்றும் மத்திய மனித வள அமைச்சகத்திடம் கொண்டு செல்லும் வகையில் அகில இந்திய அளவிலான கூட்டமைப்பின் தேவை எழுந்தது.
    இதையடுத்து, அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரிகளின் சங்கங்களின் பிரதிநிகள் இடம் பெற்றுள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
    சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதத்தை ஏஐசிடிஇ அமைப்பானது 1:15 ஆக நிர்ணயித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால், மாணவர்கள் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகள் மிகுந்த நிதிச் சுமையைச் சந்தித்து வருகின்றன. ஏஐசிடிஇ-யால் நியமிக்கப்பட்ட "காகா' குழு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாசாரம் 1:25 என்ற அளவில் இருக்க வேண்டும் என்று ஏஐசிடிஇக்குப் பரிந்துரைத்துள்ளது. ஆனால், ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:20 ஆக இருக்குமாறு விதிகளைத் திருத்தி அமைக்குமாறு ஏஐசிடிஇ-க்கு நாங்கள் கோரி வருகிறோம்.
    இதேபோன்று, அந்தந்த மாநில அரசுகள் பொறியியல் கல்லூரிக் கல்விக் கட்டணங்களை நிர்ணயிக்கும் முறைக்கு மாறாக, நாடு முழுவதும் ஒரே சீரான கல்விக் கட்டணத்தை ஏஐசிடிஇ நிர்ணயித்து நடைமுறைப்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மனிதவளத் துறை அமைச்சர், ஏஐசிடிஇ தலைவர் ஆகியோரை விரைவில் நேரில் சந்தித்து முறையிட உள்ளோம் என்று அவர்கள் கூறினர்.
    இக்கூட்டத்தில், கூட்டமைப்பின் செயலர்கள் டி.டி.ஈஸ்வரமூர்த்தி, பி. செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad