Header Ads

  • BREAKING



    ராணுவத் தளவாடங்கள் உற்பத்திக்கு ஊக்கமளிக்கப்படும்: மனோகர் பாரிக்கர்.

    பெங்களூரு: ராணுவத் தளவாடங்கள் உற்பத்திக்கு ஊக்கமளிக்கப்படும் என்றார் மத்திய ராணுவத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்.

    பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமானப் படை நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 11-ஆவது பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சியைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: 

    இந்தியாவின் பூங்கா நகரமாம் பெங்களூரில் நடைபெறும் இந்திய விமானத் தொழில் கண்காட்சியில் பங்கேற்பதை பெருமையாகக் கருதுகிறேன். உலக நாடுகள் இந்தக் கண்காட்சியில் தொடர்ந்து பங்கேற்க ஆர்வம் காட்டி வருவதால், இந்திய விமானத் தொழில் கண்காட்சி மதிப்பு மிகுந்ததாக மாறியுள்ளது.

    இந்திய விமானத் தொழில் கண்காட்சியை ராணுவத் தளவாடங்கள் உற்பத்தித் தொழில் மற்றும் பயணிகள் விமானத் தொழில் ஆகியவற்றின் பொதுமேடையாக மாற்றியிருக்கிறோம். பயணிகள் விமானத் துறை வேகமாக வளர்ந்துவருவதால், அத் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 

    இக் கண்காட்சி மூலம் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் புதிய உற்பத்தி, தொழில்நுட்பம்,விமானம், படைப்புகளை முதல்முறையாக உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். இந்திய தொழில் துறை தனது திறன்களை வெளிப்படுத்துவதற்கு இக் கண்காட்சி பயன்படுகிறது. 

    ராணுவத் தளவாடங்கள் உற்பத்திக்கு அபரிதமான ஆர்வம் காணப்படுகிறது. உற்பத்தித் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ராணுவத் தளவாடங்கள் உற்பத்திக்கான சூழலை உருவாக்க முற்பட்டிருக்கிறோம். ராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் பொதுத் துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் எவ்விதச் சிரமமும் இல்லாமல் வணிகத்தில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறோம். 

    ராணுவத் தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பைப் பெருக்க உரிமங்களை வழங்கத் தொடங்கியிருக்கிறோம். ராணுவத் தளவாட உற்பத்தியில் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு அதிகமாக்கப்படும். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ராணுவத் தளவாடங்கள் சார்ந்த உற்பத்தியில் ஈடுபடுவதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்படும். 

    வடிவமைப்பு, தொழில்நுட்பம், படைப்பாக்கம் ஆகியவற்றில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஊக்குவிப்போம். மேலும், இவற்றை இந்தியாவில் மேம்படுத்தவும் ஊக்கமளிப்போம். வெளிநாட்டு பங்களிப்புடன் பெரிய அளவில் புதுமையான படைப்புகளைத் தயாரிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

    எச்ஏஎல், பிஇஎல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் புதுமைப் படைப்பு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தை உள்நாட்டு நிறுவனங்கள் தவிர, வெளிநாட்டு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

    குறிப்பாக, ஆரம்பநிலை தொழில்முனைவோருக்கு (ஸ்டார்ட் அப்ஸ்) முன்னுரிமை அளிக்கப்படும். ராணுவத் தளவாட உற்பத்தியில் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். காலக்கெடுவுடன் கூடிய புதிய உற்பத்திக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் ஏற்கெனவே 20 திட்டங்கள் தயாராக உள்ளன. இதில் 3 திட்டங்களை செயல்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

    புதுமை, தொழில்நுட்பத்தின் வலிமை பெருக்கப்படும். இந்தவகையில் விமானத் தொழில் கண்காட்சி ஆக்கப்பூர்வமானதாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.

    இந்த விழாவில், மத்திய விமானத் துறை அமைச்சர் கஜபதிராஜூ, மத்திய விமானத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, மத்திய ராணுவத் துறை இணையமைச்சர் சுபாஷ் பம்ரே, கர்நாடக தொழில் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே, ராணுவத் தளபதி பிபின் ராவத், கப்பற்படை தளபதி சுனில் லன்பா, விமானப்படை தளபதி பீரேந்தர் சிங் தனாவ், டிஆர்டிஓ தலைவர் எஸ்.கிறிஸ்டோபர், மாநகராட்சி மேயர் ஜி.பத்மாவதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad