வருமான வரித் தாக்கலில் முரண்பட்ட தகவல்கள்: சிறப்பு விசாரணைக் குழு அமைக்கிறது மத்திய அரசு.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரித் தாக்கல் செய்த லட்சக்கணக்கானோர், தங்களது நிதி நிலை விவரங்கள் குறித்து முரண்பட்ட தகவல்களை தெரிவித்திருப்பது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து, உத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸýக்குப் பிறகு ரூ.15 லட்சம் கோடி தொகை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் வருமான வரித் தாக்கல் செய்த 18 லட்சம் பேர், தங்களது ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், அவர்களது வங்கிக் கணக்குகளில் தலா ரூ.1.25 கோடிக்கு மேல் டெபாசிட் ஆகியுள்ளன. இந்த முரண்பாடுகளை ஆய்வு செய்வதற்காக புதிய விசாரணைக் குழு அமைக்கப்படும்.
கருப்புப் பணம் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அது பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியாக இருந்தாலும் சரி; காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவாக இருந்தாலும் சரி, சட்டப்படி அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராதாமோகன் சிங்.
கருத்துகள் இல்லை