இரோம் சர்மிளா கட்சிக்கு நன்கொடை வழங்கிய கேஜரிவால்!
சமூக சேவகி இரோம் சர்மிளாவின் கட்சிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ரூ.50,000 நன்கொடை வழங்கியுள்ளார்.
மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் இரோம் சர்மிளா. இவர் முன்னெடுத்த இந்தப் போராட்டம் சர்வதேச அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் தனது நெடுங்கால உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக இரோம் சர்மிளா கடந்த ஆண்டு அறிவித்தார். மேலும், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, மக்கள் எழுச்சி நீதிக் கூட்டணி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியினை அவர் தொடங்கினார். மணிப்பூர் சட்டப்பேரவைக்கு மார்ச் 4 மற்றும் 8-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், அந்த மாநில முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து இரோம் சர்மிளா போட்டியிடுகிறார்.
இதனிடையே, தனது கட்சிக்கு போதிய நிதி இல்லாததால் பொதுமக்களிடம் அவர் நன்கொடை கோரி வருகிறார். சுட்டுரை (டுவிட்டர்) வாயிலாக இரோம் சர்மிளாவும், அவரது கட்சியினரும் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். அதன்படி, இதுவரை ரூ.4.5 லட்சம் நன்கொடை வசூலானதாக மக்கள் எழுச்சி நீதிக் கூட்டணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தில்லி முதல்வர் கேஜரிவால், தனது பங்குக்கு ரூ.50,000 நன்கொடையை இரோம் சர்மிளா கட்சிக்கு அளிப்பதாக சுட்டுரையில் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், தங்களால் இயன்ற நிதியை மக்கள் எழுச்சி நீதிக் கூட்டணிக்கு வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக, தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த இரோம் சர்மிளா, தன்னிடம் ரூ.2.6 லட்சம் மட்டுமே பணஇருப்பு உள்ளதாக அதில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை