எண்ணூர் துறைமுகம் அருகே விபத்துக்குள்ளான கப்பல்கள் மீது வழக்கு!
சென்னை கடலில் எண்ணெய் படலம் கலக்க காரணமான இரண்டு கப்பல்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28-ம் தேதி ஈரான் நாட்டில் இருந்து எரிவாயுவை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இறக்கிவிட்டு புறப்பட்டுச் சென்ற இங்கிலாந்து நாட்டின் எம்.பி.டபிள்யூ மாப்பிள் என்ற சரக்குக் கப்பலும் துறைமுகத்துக்கு 32 மெட்ரிக் டன் அளவிற்கு கச்சா எண்ணெயுடன் வந்த மும்பையின் டான் காஞ்சிபுரம் கப்பலும் நடுக்கடலில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதில் டான் காஞ்சிபுரம் கப்பலின் எரிவாயு டாங்கர் சேதம் அடைந்ததில் கச்சா எண்ணெய் கடலில் கசிந்து எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு, மெரீனா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவியது. இதனால் ஆமைகள், மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் செத்து மிதந்தன.
இதையடுத்து எண்ணூர் துறைமுகம் சார்பில் டான் காஞ்சிபுரம் கப்பல் மீது எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மீஞ்சூர் காவல் நிலையத்தில் டான் காஞ்சிபுரம் கப்பல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தனது விசாரணை வரம்புக்கு உட்பட்ட இடத்தில் விபத்தை ஏற்படுத்தியதாக டான் காஞ்சிபுரம் மற்றும் எம்.பி.டபிள்யூ மாப்பிள் கப்பல்கள் மீது தமிழக கடலோரக் காவல்படையும் வழக்கு பதிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை