Header Ads

  • BREAKING



    உணவு தரம் குறித்து புகார் அளித்த வீரரைச் சந்திக்க மனைவிக்கு அனுமதி: தில்லி உயர் நீதிமன்றம்.

    தரமில்லாத உணவு வழங்கப்பட்டதாகக் கூறி சமூக வலைதளத்தில் விடியோ பதிவு வெளியிட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை, அவருடைய மனைவி சந்திப்பதற்கு தில்லி உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.
    எல்லைப் பாதுகாப்புப் படையில் வீரராகப் பணியாற்றும் தேஜ் பகதூர் யாதவ், பணியின்போது தனக்கு தரமில்லாத உணவு வழங்கப்பட்டது என்று கூறும் விடியோ பதிவை சமூக வலைதளத்தில் கடந்த மாதம் பதிவேற்றம் செய்தார்.
    இதையடுத்து, அந்த விடியோ பதிவை பலரும் பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில், தேஜ் பகதூர் யாதவ் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
    இதனிடையே, தேஜ் பகதூர் யாதவை தங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவரது மனைவியும், குடும்பத்தினரும் புகார் தெரிவித்தனர். 
     இந்நிலையில், தனது கணவரை மீட்டுத் தரக் கோரி தேஜ் பகதூர் யாதவின் மனைவி தில்லி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
    அந்த மனுவை நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.
    அப்போது எல்லைப் பாதுகாப்புப் படை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், "தேஜ் பகதூர் யாதவ் சிறையில் அடைக்கப்படவில்லை; அவர் தற்போது ஜம்முவின் கலிபாரி பகுதியிலுள்ள 88-ஆவது பட்டாலியன் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்' என்று தெரிவித்தார்.
    அதையடுத்து நீதிபதிகள், தேஜ் பகதூர் யாதவை அவருடைய மனைவி சந்திப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
    மேலும், தேஜ் பகதூர் யாதவ் தங்கியிருக்கும் இடத்துக்கு அவரது மனைவியை எவ்வித சிரமுமின்றி அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், அவர் தனது கணவருடன் 2 நாள்கள் தங்கியிருக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad