Header Ads

  • BREAKING



    இஸ்லாமிய குடியேற்றத் தடைக்கு எதிர்ப்பு: அமெரிக்க நீதி, குடியேற்றத் துறைகளின் தலைமை அதிகாரிகள் பதவி நீக்கம்.

    இஸ்லாமை பெரும்பான்மையாகக் கொண்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதித்து அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்க மறுத்த அந்த நாட்டின் தலைமை அரசு வழக்குரைஞர் மற்றும் குடியேற்ற அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிகள் பறிக்கப்பட்டன.
    ஈரான், இராக், யேமன், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா ஆகிய நாடுகளிலிருந்து வருவோரை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க கடுமையான நிபந்தனைகள் விதித்தும், அகதிகளை ஏற்பதில் கட்டுப்பாடுகள் குறித்தும் புதிய ஆணையை அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
    தேர்தலின்போது டிரம்ப் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவே இந்த குடியேற்றத் தடை உத்தரவு அமைந்திருந்தாலும், இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியது. 
     உத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் சனிக்கிழமை தொடங்கிய போராட்டங்கள், ஞாயிற்றுக்கிழமை மேலும் தீவிரமடைந்தன. வாஷிங்டனில் அதிபரின் வெள்ளை மாளிகை, மேன்ஹாட்டன் சுதந்திர தேவி சிலை, பாஸ்டன் காப்லீ சதுக்கம், சான் ஃபிரான்சிஸ்கோவின் முக்கிய இடங்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இந்த முடிவு அமெரிக்காவின் அடிப்படைத் தன்மைக்கு எதிரானது எனவும், நாட்டின் பன்முகத் தன்மையைப் பாழ்படுத்துவதாகவும் கோஷமெழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அகதிகளை வரவேற்கும் வகையிலான கோஷங்களையும் எழுப்பினர்.
    இதேபோன்ற போராட்டங்கள் நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களிலும் நடைபெற்றன.
    அரசாணைக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளன.
    ஜனநாயகக் கட்சி ஆளும் 16 மாகாணங்களின் தலைமை வழக்குரைஞர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், முஸ்லிம்கள் குடியேற்றத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, அரசமைப்புச் சட்டத்துக்கும், அமெரிக்காவின் அடிப்படைத் தன்மைக்கும், சட்டத்தும் விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தச் சூழலில், குடியேற்றம் குறித்த அதிபரின் உத்தரவை அமல்படுத்த வேண்டாம் என்று நீதித் துறைக்கு அமெரிக்காவின் தாற்காலிக அரசு தலைமை வழக்குரைஞர் சால்லி யேட்ஸ் உத்தரவிட்டார்.
    இதைக் கண்டு அதிர்சியுற்ற அதிபர் மாளிகை, யேட்ûஸ பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது.
    இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
    அமெரிக்க அரசின் தலைமை வழக்குரைஞர் சால்லி யேட்ஸ், தான் பதவி வகிக்கும் நீதித் துறைக்கு துரோகமிழைத்துவிட்டார்.
    ஒபாமா அரசால் நியமிக்கப்பட்ட அவருக்கு, சட்டவிரோத குடியேற்றம் குறித்த விவகாரங்களில் போதிய அனுபவம் கிடையாது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதிய தாற்காலிக அரசு வழக்குரைஞராக டானா போயென்டேவை நியமிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதற்கிடையே, அதிபரின் குடியேற்றத் தடை உத்தரவை அமல்படுத்த மறுத்த குடியேற்ற அமலாக்கத் துறை இயக்குநர் டேனியல் ராஸ்லேடும் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக தாமஸ் டி ஹோமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad