பிரபல தாதுமணல் நிறுவனத்தின் 15 குடோன்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை.
நெல்லை மாவட்டத்தில் பிரபல தாதுமணல் நிறுவனத்திற்கு சொந்தமான 15 குடோன்களில், ஆட்சியர் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு தென் மாவட்டங்களில் செயல்படும் கனிம நிறுவனம், சட்டவிரோதமாக தாது மணல் எடுப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, தூத்துகுடி மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, வெளிநாட்டிற்கு தாதுமணலை ஏற்றுமதி செய்ததாக அந்நிறுவனத்தின் மீது புதிதாக வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 14 குடோன்களுக்கு அம் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். இதன் தொடர்ச்சியாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவின் பேரில் அம்மாவட்டத்திற்கு உட்பட்ட கரைசுத்துபுதூர், குட்டம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், திருவெம்பலாபுரம்,இருக்கன்துறை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் 15 குடோன்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சேரன்மகாதேவி சார்ஆட்சியர் விஷ்ணு, வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ராதாபுரம் தாசில்தார் ரவிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை