Header Ads

  • BREAKING



    ரூ. 2.97 கோடி மோசடி புகார்: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கைது செய்ய தடை.

    ரூ.2.97 கோடி மோசடி செய்ததாக கூறப்படும் புகாரில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை புதன்கிழமை (மார்ச் 15) வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
    திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் சபாபதி. இவர் திண்டுக்கல் காவல்துறையில் அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தன்னிடம் வாங்கிய பணத்தில் ரூ.2 கோடியே 97 லட்சத்து 90 ஆயிரத்து 700-ஐ திருப்பித்தராமல் ஏமாற்றியதாக கூறியிருந்தார்.
    இதன் பேரில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சபாபதி மனு தாக்கல் செய்திருந்தார்.
    இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    இந்நிலையில், இவ்வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி, நத்தம் விஸ்வநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். 
    அதில், அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிளவு காரணமாக என் மீது இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    அரசியல் பிரச்னைகள் காரணமாக போலீஸார் என் மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வழக்கில் இருந்து எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
    இந்த மனு நீதிபதி ஜெ.நிஷாபானு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மக்களவைத் தேர்தலுக்கு ரூ.70 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.
    ஆனால், புகார் தாரர் தேர்தல் செலவுக்காக ரூ.4 கோடிக்கும் மேல் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். இதிலிருந்து அவரது புகார் பொய்யானது என்பது தெரிகிறது என்றார்.
    அப்போது சபாபதி தரப்பு வழக்குரைஞர், இந்த வழக்கில் தங்களையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கக்கோரி மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.
    இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, விசாரணையை புதன்கிழமைக்கு (மார்ச் 15) ஒத்திவைத்து, அதுவரை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad