பிஎஸ்-4 விதிப்படி தயாராகாத வாகனங்களை விற்கத் தடை.
பாரத் 4 எனப்படும் BS-4 மாசுக் கட்டுப்பாட்டு விதியின் கீழ் வராத வாகனங்களை விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
இந்த தடை உத்தரவு வரும் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. பிஎஸ்-4 (BS-4) விதிமுறைக்கு உட்பட்ட வாகனங்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31ஆக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற ஒன்றாம் தேதி முதல் இந்த விதிமுறையில் வராத வாகனங்களை விற்பனை செய்ய தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை நீதிபதிகள் மதன் லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. மனு மீதான தீர்ப்பை நேற்று ஒத்தி வைத்திருந்த நீதிபதிகள், இன்று தீர்ப்பை வெளியிட்டனர். அதில் பிஎஸ் - 4 (BS 4) விதிமுறையை நிறைவு செய்யாத வாகனங்களை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விற்கவும், பதிவு செய்யவும் தடை விதிக்கப்பட்டது. வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வர்த்தக நலனைவிட நாட்டு மக்களின் ஆரோக்கியம் மிக முக்கியமானது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்த தீர்ப்பால், பிஎஸ்-2 (BS 2), பிஎஸ்-3 (BS 3) ஆகிய மாசு விதிமுறை கொண்ட இரண்டு, மூன்று சக்கர வாகனங்கள், கார் மற்றும் வர்த்தக வாகனங்களை நிறுவனங்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் விற்பனை செய்யவோ, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை