Header Ads

  • BREAKING



    பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், கணக்கு காட்ட முடியாத டெபாசிட்டுகள் மூலம் ரூ.6,000 கோடி வரி வருவாய்.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், கணக்கு காட்ட முடியாத டெபாசிட்டுகள் மூலம் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
    பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கையிருப்பில் இருந்த நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்தனர். கையிருப்பில் பெருமளவில் பணத்தை வைத்திருந்தவர்கள் கணக்கு காட்ட முடியாத நிலையில், தாமாக முன்வந்து அதைத் தெரிவிக்கும்போது, 60 சதவீதம் அளவுக்கு வரி வசூலிக்கப்பட்டது. இது தற்போது 75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், கணக்கு காட்ட முடியாத டெபாசிட்டுகள் மூலம் வரித்துறை அதிகாரிகள் 6 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக, கறுப்பு பணம் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் துணைத் தலைவர் நீதியரசர் அரிஜித் பசாயத் தெரிவித்துள்ளார். இந்த தொகை இன்னும் உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.
    முதல் கட்டமாக, 50 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் அரிஜித் பசாயத் குறிப்பிட்டார். அரசு அதிகாரிகள் பெரும் தொகையை டெபாசிட் செய்திருந்தால், அது ஊழல் பணமா என்ற அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாகவும் அவர் கூறினார். ஒடிசாவில் ஒரு வனத்துறை அதிகாரி இரண்டரை கோடி ரூபாயை டெபாசிட் செய்ததாகவும், அது ஊழல் பணமாக அல்லாமல் வேறு வழியில் வந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அரிஜித் பசாயத் குறிப்பிட்டார். ஜன்தன் கணக்குகளில் திடீரென கணிசமான தொகை டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்தும் ஆராயப்படும் என்றும் அரிஜித் பசாயத் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad