Header Ads

  • சற்று முன்



    திண்டுக்கல்:சிறுமலை வனப்பகுதியில் அழிக்கப்படும் மரங்கள்-கோடிகளில் புரளும் மரக்கடத்தல் கும்பல்.

    திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில், பலகோடி ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வனத்துறை அதிகாரிகள் துணையுடன் வெட்டிக் கடத்தப்படுகிறது. வனத்துறை அமைச்சரின் சொந்த ஊரிலேயே வனம் அழிக்கும் அவலம்.
    திண்டுக்கல் அடுத்துள்ளது சிறுமலை வனப்பகுதியில், வனத்துறைக்கு சொந்தமான 30 ஆயிரம் ஏக்கர் காடுகளும், 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் உள்ளன. காடுகளில் உயர்தரமான தேக்கு, பிள்ளை மருது, சிலவாகை உட்பட பல வகையான விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. இவை, 50 முதல் 100 ஆண்டுகள் பழமையான மரங்களாகும்.
    விவசாயிகளுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் மரங்களை வெட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெரும் கடத்தல் கும்பல், இந்த அனுமதியை வைத்துக்கொண்டு வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் விலை உயர்ந்த மரங்களை வெட்டிக் கடத்துகின்றனர். இதற்கு, வனத்துறை அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறப்படுகிறது.
    சிறுமலையை சுற்றியுள்ள தென்மலை, அகஸ்தியாபுரம், குட்டக்காடு, தாளக்கடை, தொலுக்காடு, புதூர் ஆகிய பகுதிகளில் இவ்வாறு பலகோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மரங்கள் வெட்டப்படுவதால், வன விலங்குகள் அழிவதும், அவை குடியிருப்புகளில் ஊடுறுவி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் ஊர் மக்கள் புலம்புகின்றனர். வனத்துறை அமைச்சராக இருக்கக்கூகூடிய திண்டுக்கல் சீனிவாசனின் சொந்த ஊரிலேயே வனம் அழிக்கப்படுவதுதான் உச்சபட்ச கொடுமை.
    இது குறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேசனிடம் கேட்டபோது, சர்வே எண்ணை குறிப்பிட்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சிறுமலை வனச்சரகர் சங்கரனிடம் கேட்டபோது, பட்டா நிலத்தில் வெட்டப்பட்டு வரும் மரங்களை எடுத்து செல்ல ஏதுவாக, அரசுக்கு சொந்தமான இடத்தில் மரங்களை போட்டு வைத்துள்ளதாக அற்புதமான விளக்கம் அளித்தார். எனவே, இந்த விவகாரத்தில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் நேரில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வன ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad