அந்நிய செலவாணி மோசடி வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான டி.டி.வி.தினகரன்!
சென்னை: அமலாக்கத்துறை 1996-ஆம் ஆண்டு தொடர்ந்த அந்நிய செலவாணி மோசடி வழக்கில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
1996ல் ரூ.45.31 கோடி அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக மத்திய அமலாக்கத்துறை தினகரன் மீது 2 வழக்குகளை பதிவு செய்தது. இருபது வருடங்களாக நடந்த இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் தினகரனை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் தினகரனை விடுவித்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது.
அத்துடன் இந்த வழக்கை தினந்தோறும் விசாரிக்க வேண்டுமென்றும் எழும்பூர் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு வழக்கு தொடர்ந்தது.
அதன்படியே இன்று விசாரணை நடைபெற்றது.விசாரணைக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி வளர்மதி முன்பு டி.டி.வி.தினகரன் ஆஜரானார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது ஆர்.கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஒருவேளை அவர் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினராகும் பட்சத்தில் இந்த் வழக்கில் வரக்கூடிய தீர்ப்பு அவருக்கு பாதகமாக அமையும் வாய்ப்பு உள்ளது.
கருத்துகள் இல்லை