Header Ads

 • BREAKING  அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்!

  சமூகத்தின் எல்லா நிகழ்வுகளிலும் ஒரு நுண் அரசியல் மறைந்திருப்பதை உற்று நோக்கும் யாவரும் உணரமுடியும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை தொடங்கி, மக்களுக்கான அரசு திட்டங்கள் வரைக்கும் ஒவ்வொன்றிலும் அரசியல் பின்னோட்டம் இழையோடியிருக்கிறது. இதையெல்லாம் மாண்புமிகு மகாஜனம் புரிந்து வைத்துள்ளதா அதற்கெல்லாம் அவர்களுக்கு கால நேர அவகாசம் இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

  அலுவல் அல்லல்களுக்கிடையில் சிக்கி அன்றாட தேவைகளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் சாமானியன் எல்லா நிகழ்வுகளையும் ஒரு செய்தியாக மட்டுமே பார்த்து பழகிக் சகித்துக் கொண்டிருக்கிறான். அவனின் அமைதிக்குப் பின்னால் வாக்களிக்கும் வாய்ப்புக்கான காத்திருப்பு மட்டுமே புலப்படுகிறது. அதிலும் வெறுப்பின் உச்சத்திக்குச் சென்ற சிலர் யாருக்கும் வாக்களிக்காமல் நோட்டாவை தேர்வு செய்து விடுகின்றனர்.

  ஆனால் இன்றைய அரசியல் செயல்பாடுகளோ மக்களைப் பற்றிய சிந்தனையுடனோ, சமூக அக்கறையுடனோ இருப்பதாக தெரியவில்ல. 5 ஆண்டு என்பது அவர்களுக்கான சுயநல வாய்ப்பாக கருதி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்வதாக மட்டுமே இருக்கிறது. தேர்தல் நேரம் நெருங்கும் போதும் மட்டும் மீண்டும் மக்களிடம் வந்து சில இலவச திட்டங்களையும் கவர்ச்சி மிகு அறிவிப்புகளையும் தேர்தல் அறிக்கைகளாக தந்து வாக்குகளை சேகரிக்க முயல்கின்றனர்.

  சபிக்கப்பட்ட மகாஜனங்களோ தனக்கான நல்ல தலைவனை தேடித்தேடி.. இவனுக்கு அவன், அவனுக்கு இவன் பரவாயில்லை என்ற ரீதியில் வாக்களித்து விட்டு மீண்டும், மீண்டும் எதிர்பார்ப்பிலே காலம் தள்ளுகின்றனர். ஆனால் தேர்தல் அறிக்கைகளும், அரசு திட்டங்களும் முழுவதும் நிறைவேறுவதற்குள் 5 ஆண்டு கழிந்துவிடுகிறது.. அதற்கு உதாரணாமாக நாம் நிறைய அறிக்கைகளையும் அறிவிப்புகளையும் சொல்லலாம் என்றாலும் இன்றைய சூழலுக்கு பொருத்தமாக ஒன்றை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

  அதுதான் ஆட்டோ ஜிபிஎஸ் மீட்டர் திட்டம். சென்னை போன்ற பெருநகரங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவே கடந்த 2013ம் ஆண்டு புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, முதல், 1.8 கி.மீ., துாரத்துக்கு, 25 ரூபாய்; பின், கூடுதலாக, ஒவ்வொரு கி.மீ.,க்கும், 12 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. அவற்றை, ஆட்டோ ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக, பயண முடிவில், கட்டண தொகையை காட்டும் ரசீது தர முடிவு செய்யப்பட்டது. அதற்கான, 'பிரின்டர்' மற்றும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க, ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய மீட்டர்களை பொருத்த உத்தரவிடப்பட்டது.

  ஆனால், இன்று வரை மீட்டர் வாங்கும் பணி துவங்கவில்லை. இது குறித்து தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகளிடம் கேட்டால், ஜிபிஎஸ் மீட்டர் கருவியை விநியோகம் செய்ய தில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை தேர்வு செய்தோம். அதற்கான ஒப்புதலுக்கு தலைமை செயலகத்துக்கு, பல மாதங்களுக்கு முன் கோப்புகளை அனுப்பினோம். பரபரப்பான அரசியல் சூழ்நிலை காரணமாக அந்த கோப்புகளை மறந்துவிட்டதாக தெரிகிறது என்று கூறியுள்ளார்.

  எந்த விதத்தில் இது முறையான பதிலாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. அதற்கிடையில் தற்போது வாட் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் மீதான விலை தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

  அதன்படி, பெட்ரோல், டீசல் விலையை மாதத்தில் 2 முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது. இந்நிலையில் திடீர் என வாட் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் மீதான விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்ந்துள்ளது. இதன் மூலம் டீ. காப்பி விலை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் ஆட்டோ கட்டணம் முதல் அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த வாட் வரி உயர்வுக்குப் பின் இருக்கும் நுண் அரசியல் என்ன என்று யோசித்தால்.. எடப்பாடி பழனிசாமி முதல்வர் பொறுப்பேற்றதும் அறிவித்துள்ள "விவசாயிகளுக்கு 2,247 கோடி ரூபாய் பயிர் இழப்பு, வறட்சி நிவாரண உதவித்தொகை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகை உயர்வு, 1,486 கோடியே 12 லட்ச ரூபாய் செலவில் தொடங்கியுள்ள புதிய திட்ட பணிகள், 500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடியது". போன்ற விசயங்களால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமை மற்றும் செலவை சரிகட்ட எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாக தெரிகிறது.

  இன்னும் இரு வாரங்களில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், வரி மாற்றம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் புதிய வரிகள் இல்லாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே வரிகளை உயர்த்தியிருப்பதாக தெரிகிறது.

  தற்போதைய நிலையில் "தமிழக அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.18 வரியாக வசூலிக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் கமிஷனாக ரூ.5.41 வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.28.73 எனும் போது அதன்மீது வரி மற்றும் கமிஷனாக ரூ.45.66, அதாவது 161% வசூலிக்கப்படுகிறது. ஒரு நபர் 45.66 ரூபாய் ஒருலிட்டர் பெட்ரோலுக்கு கூடுதலாக செலுத்தும் போது மாநிலம் முழுவதும் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை எத்தனை" வரி என்ற பெயரில் அரசு நம்மிடம் இருந்து சுரண்டி பெறும் வருமானம் எவ்வளவு என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

  நம்மிடம் இருந்து சுரண்டி நமக்கே இலவசங்களை தந்து சாதனை அரசு என்று பெயர் பெற்றுக் கொள்ளும் இந்த அரசியல் உத்தமர்களை என்ன வென்று சொல்வது.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad