வட சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி கைது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.கே.நகரில் நேற்று இரவு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, கார் ஒன்றில் வட சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி உள்ளிட்ட 3 பேர் சென்றுள்ளனர். அவர்கள் காரை மடக்கியபோது, போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பிக்க முயற்சித்தனர். அப்போது அந்த காரை விரட்டிப்பிடித்த போலீசார், அதில் இருந்த பிரபல ரவுடியான காக்காத்தோப்பு பாலாஜி, அவனது கூட்டாளிகள் திருவாரூரைச் சேர்ந்த சம்பந்தன், சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பிரேம்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் காரில் இருந்த பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வட சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வரும் காக்காத்தோப்பு பாலாஜி மீது 5 கொலை வழக்குகள் உள்பட 53 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆள் கடத்தல், கூலிக்கு கொலை செய்தல் போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் காக்காத்தோப்பு பாலாஜி, சுமார் ஓராண்டுக்கு முன் வட சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் அரசியல் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய சென்றபோது, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2 மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி காக்காத்தோப்பு பாலாஜியை போலீசார், தற்போது மீண்டும் கைது செய்துள்ளனர். சிறையில் இருந்தவாறே தனது கூட்டாளிகள் மூலம் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி கைதேர்ந்தவன் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை