Header Ads

  • BREAKING



    ஆசிரியர்கள் தரம் மிக மோசம் : நீதிபதி வேதனை.

    ஐந்தாம் வகுப்பு மாணவன் தனது பெயரை கூட எழுத முடியாத அளவுக்கு, அவரது ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
    வரும் 2017-18 ஆம் கல்வி ஆண்டுக்கு கூடுதலாக மாணவர்களை சேர்த்துக் கொள்ள அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் தென்மண்டல இயக்குனர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோரி , திருச்சியை சேர்ந்த எஸ்.வி.ஐ. ஆசிரியர் கல்லூரி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    மேலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அனுமதி அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
    தற்போது பி.எட், எம்.எட் படிப்புகளை வழங்கும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு, தேசிய ஆசிரியர் கவுன்சில் எந்த கொள்கையும் இல்லாமல் இயந்திர தனமாக அனுமதி வழங்குகிறது.
    இதனால், நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் காளான் போல் முளைத்துள்ளன. இவற்றால் ஐந்தாம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத முடியாத அளவுக்கு அவர்களது ஆசிரியர்களின் கற்பிக்கும் தரம் மிக மோசமாக உள்ளது வேதனை தெரிவித்துள்ளது.
    இதற்கு காரணம் "லெட்டர் பேர்டு"கல்வி நிறுவனங்களில் படித்து வெளிவரும் ஆசிரியர்கள் தான். மேலும் தமிழகத்தில் ஆசிரியர்களின் தரம் குறைந்து காணப்படுகிறது. இந்த கல்வி வணிகமயமாக்கல் காரணமாக தமிழக மாணவர்களால் பிற மாநில மாணவர்களுடன் போட்டி போட முடியவில்லை.
    எனவே, இந்த வழக்கில் தில்லியில் உள்ள தேசிய ஆசிரியர் கவுன்சில் இயக்குனர், தமிழக உயர்கல்வி துறை செயலாளர், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைகழகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர்களை எதிர் மனுதாரர்களாக இணைக்கிறேன்.
    தமிழகம் மற்றும் நாடு முழுவதும் எத்தனை கல்லூரிகள் பி.எட், எம்.எட் வகுப்புகளை நடத்துகின்றன? எத்தனை மாணவர்கள் வெளிவருகிறார்கள் ?எத்தனை பேர் வேலையின்றி உள்ளனர்? என்ன வேலை வாய்ப்பு இருக்கிறது?
    உள்ளிட்ட, ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடர்பாக பத்து கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு மார்ச் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad