Header Ads

  • சற்று முன்



    தில்லியில் தமிழக விவசாயிகள் மீண்டும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.

    தில்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தின் போது சனிக்கிழமை இரண்டு விவசாயிகள் தற்கொலைக்கு முயல்வதாகக் கூறி மீண்டும் மரத்தில் ஏறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 15-ஆம் தேதி 2 விவசாயிகள் தற்கொலைக்கு முயன்று பின்னர் கீழே இறங்கினர்.

    விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்; அனைத்து நதிகளை நீர்வழிப் பயணத் திட்டத்தின் மூலம் இணைக்க வேண்டும்; விவசாய விளை பொருள்களுக்கு லாபகர விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 14-ஆம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினர்.

    நடிகர்கள் ஆதரவு: இவர்களின் போராட்டத்துக்கு நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அவர்கள் சனிக்கிழமை காலையில் சந்தித்து விவசாயிகளின் பிரச்னைகளை விளக்கி மனு அளித்தனர்.
    இதைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தர் பகுதிக்கு திரும்பிய திரையுலகக் குழுவினர், அருண் ஜேட்லியிடம் தாங்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து விவசாயிகளிடம் விளக்கினர்.
    விஷால் யோசனை: பின்னர் நடிகர் பிரகாஷ் ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநில விவசாயிகளும் வந்துள்ளதால் இவர்களின் குரல் நாடு முழுவதும் எட்டியுள்ளது. விவசாயிகள் தனி மரம் அல்ல. அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என உணர்த்த மீண்டும் போராட்ட பகுதிக்கு வந்தோம்' என்றார்.

    நடிகர் விஷால் கூறுகையில், "திரையரங்குகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஒரு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரையில் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள், திரையரங்குகளின் உரிமையாளர்கள், பட விநியோகிஸ்தர்கள் ஆகியோரை கேட்கவுள்ளேன். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுமாறு அருண் ஜேட்லியை கேட்டுக் கொண்டோம்' என்றார்.

    மரத்தில் ஏறிய விவசாயிகள்: இதற்கிடையே, ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் கடந்த 15-ஆம் தேதி தற்கொலைக்கு முயல்வதாகக் கூறி மரத்தில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய திருச்சியை சேர்ந்த விவசாயிகள் அகிலன், ரமேஷ் ஆகிய இருவரும் சனிக்கிழமை மீண்டும் அருகே இருந்த வேப்ப மரத்தில் ஏறி தற்கொலை செய்யப் போவதாக அழுதபடி கூறினர்.
    இதைப் பார்த்த நடிகர் விஷால் உள்ளிட்டோரும் காவல் துறையினரும் சுமார் அரை மணி நேரம் இருவரிடமும் சமாதானம் பேசினர். விஷால் குழுவினருடன் வந்திருந்த நடிகர் அபி சரவணன் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவர்களை மீட்க முயன்றார்.
    இக்காட்சியை செய்தி சேகரிக்க வந்த நிருபர்கள் தொலைக்காட்சிகளிலும், கல்லூரி மாணவர்கள் தங்களின் முகநூல் பக்கங்களிலும் நேரலையாக ஒளிபரப்பினர்.

    இதையடுத்து, ஜந்தர் மந்தர் பகுதிக்கு காவல் துறை துணை ஆணையர் பி.கே. சிங், கூடுதல் துணை ஆணையர் ராஜேந்திர பிரசாத் மீனா, உதவி ஆணையர் வேத் பூஷண் ஆகியோரும் தீயணைப்புப் படையினரும் வந்தனர். அதற்குள் மரத்தில் ஏறிய இருவரும் கீழே இறங்கினர்.

    இந்நிலையில், அய்யாக்கண்ணு உள்ளிட்ட சங்கத்தின் சில முக்கியத் தலைவர்கள் நாடாளுமன்றக் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர். "அமைதி வழியில் போராட உங்களுக்கு அனுமதி உண்டு. ஆனால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று விவசாயிகளை காவல் துறை உயரதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.

    அதிருப்தியில் திரையுலகினர்

    விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் கோரிக்கையை மனுவாக எடுத்துக் கொண்டு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அவரது அமைச்சக அலுவலகத்தில் நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ், ரமணா, இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் சனிக்கிழமை காலையில் சந்தித்து அளித்தனர்.
    தமிழகத்தில் இருந்து வந்த திரையுலகக் குழுவினரை நாற்காலியில் அமர வைக்காமல் நிற்க வைத்து ஐந்து நிமிடங்கள்கூட பேசாமல் அருண் ஜேட்லி திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் அதிருப்தி அடைந்ததாகத் தெரிகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad