மெட்ரோ ரயிலில் திருக்குறளுக்கு கெட் அவுட்; குளிர்பான நிறுவனங்களுக்கு கட்-அவுட்டா?
சென்னை : சென்னை மெட்ரோ ரயில்களில் இடம்பெற்றிருந்த திருக்குறள் பேனர்கள் நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக குளிர்பான விளம்பர பேனர்கள் இடம்பெற்றிருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னை விமான நிலையம், சின்னமலை, கோயம்பேடு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பெட்டிகளுக்குள் இதுநாள் வரை திருக்குறள் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், இவை திடீரென்று அகற்றப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக தனியார் குளிர்பானம் மற்றும் சில தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான விளம்பரப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து மெட்ரோ ரயில் பெட்டிகளிலும் வைக்கப்பட்டிருந்த திருக்குறள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தின்தலைநகர் சென்னையிலேயே திருக்குறளுக்கு இப்படி ஒரு அவமரியாதையா என்று ஆதங்கப்படுகின்றனர்.
இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, மெட்ரோ ரயில் பெட்டிகளில் விளம்பரங்கள் வைக்க டெண்டர் விடப்பட்டது. அப்போது, விளம்பரத்துக்கான அளவுகளையும் இடங்களையும் காண்பிக்கவே, திருக்குறள்கள் அச்சிடப்பட்டு போஸ்டர் போல ஒட்டப்பட்டிருந்தது.
தற்போது விளம்பரத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி, விளம்பரங்கள் அந்தந்த இடங்களில் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளது. இது தவிர திருக்குறள் வேண்டும் என்றே அகற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை