Header Ads

  • BREAKING



    தாது மணல் கொள்ளையர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை.

    தமிழகத்தில் தாது மணல் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த தாதுமணல் குடோன்களில் 3 வது நாளாக அதிரடி சோதனை நடைபெற்று வரும் நிலையில் இதுவரை பலகோடி ரூபாய் மதிப்புள்ள 4 லட்சத்து 37 ஆயிரம் மெட்ரிக் டன் தாதுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கனிமவளங்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழகத்தில் தாது மணல் எடுப்பதற்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ந்தேதி முதல் தமிழக அரசு தடை வித்துள்ளது. இந்த தடை உத்தரவை மதிக்காமல் சில நிறுவனங்கள் சட்டவிரோதமாக தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டு கடற்கரை மணலில் இருந்து கோடிகணக்காண ரூபாய் மதிப்புள்ள தாதுக்களை பிரித்து வெளிநாட்டுக்கு கடத்தி கொள்ளை லாபம் பார்த்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
    அண்மையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் ரவிக்குமார் ஒப்புதல் வழங்கியது போல போலி ஆவணங்கள் மூலம் 420 மெட்ரிக் டன் தாதுக்களை வெளி நாட்டுக்கு கடத்த முயன்ற கும்பல் ஒன்று சுங்கத்துறையிடம் சிக்கிக்கொண்டது. மாவட்ட ஆட்சியர் கையெழுத்து போல போலி ஆவணம் தயாரித்த தூத்துக்குடி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் தாது மணல் நிறுவனங்களை கண்டறிந்து அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
    முத்தையாபுரம், மடத்தூர், சிப்காட், சிட்கோ உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள பி.எம்.சி. இண்டியன் ஓசன் உள்ளிட்ட அனைத்து மினரல்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான குடோன்களில் 3-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. தாலுகா அளவில் 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 8 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 22 குடோன்களில் சட்டவிரோதமாக மறைத்துவைக்கப்பட்டிருந்த கார்னட், இலுமினேட், சிர்கான்,ருட்டல் போன்ற தாதுக்கள் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டுள்ளன.
    இதுவரை நாட்களில் மொத்தம் 4 லட்சத்து 37 ஆயிரத்து 476 மெட்ரிக் டன் தாதுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தாதுக்களை கடத்தும் நோக்கில் பதுக்கிவைத்திருந்த இந்த 22 குடோன்களுக்கும் அதிகாரிகள் சீல்வைத்துள்ளனர்.
    இதனிடையே நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவின் பேரில் கரைசுத்துபுதூர், குட்டம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், திருவெம்பலாபுரம், இருக்கன்துறை உள்ளிட்ட இடங்களில் உள்ள 15 தாது மணல் குடோன்களில் சேரன்மகாதேவி சார்ஆட்சியர் விஷ்ணு, வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ராதாபுரம் தாசில்தார் ரவிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். முறைகேடாக செயல்பட்ட இரண்டு நிறுவனங்களின் 2 குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad