Header Ads

 • BREAKING  சசிகலா பக்தியினும் கீழானது தீபா ஆதரவு.


  ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட ஒருவாரத்துக்குள் அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை போஸ்டர் நாயகியாக பதவி உயர்வு செய்துவிட்டார்கள். சில நாளில் சசிக்கு பேனர் வைத்தால்தான் அவர்கள் விசுவாசம் அங்கீகாரம் பெறும் எனும் நிலை வந்துவிட்டது. இந்த மாற்றத்துக்கு தயாராவதற்கு அவர்களுக்கு எந்த சிறப்பு தயாரிப்பும் தேவையில்லை. அதிமுகவின் கட்சியமைப்பு அப்படியான ஒரு மனோபாவத்தினால்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆரும் ஜெயாவும் அமர்ந்திருந்த இடத்துக்கு வர தகுதி என்ற ஒன்றே அவசியமில்லை.
  இந்த நிலையில்தான் சசிகலாவின் தகுதி பற்றிய திடீர் ஞானோதயங்கள் பல தரப்பிலும் எழுகின்றன. இந்த சிந்தனை உதித்திருக்கும் எல்லோருக்கும் ஜெயலலிதாவின் சகல நடவடிக்கைகளிலும் வியாப்பித்திருந்த சசிகலாவின் செல்வாக்கு தெரியும். அதிமுகவின் தீர்மானிக்கும் சக்தியாக நடராஜன் இருந்தது தெரியும். அதிமுக காலத்தில் நடக்கும் கொள்ளைகளின் பெரும் பங்கை விழுங்குவது மன்னார்குடி கும்பல் என்பது தெரியும். ஜெ ஜாமீனில் வந்த பிறகு அதிமுகவின் குடுமி பாஜக வசம் முழுமையாக சிக்கியிருப்பதும் தெரியும். இந்த வரலாற்றின் தொடர்ச்சியில் இப்போதும் எந்த மாற்றமும் நிகழவில்லை, நிகழப்போவதும் இல்லை. அப்படிப்பட்ட சூழலில் சசிகலாவின் பதவி என்பது வெறும் சடங்கு. ஜெயா முதல்வரான நாளில் இருந்தே சசிகலாவுக்கு இந்த அதிகாரங்கள் இருந்தன. அது நாளாக நாளாக அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது.
  ஜெ சிறை மீண்ட செல்வியான பிறகு அரசாங்கமும் கட்சியும் முற்று முழுதாக சசிகலா கும்பலால்தான் நடத்தப்பட்டது. கணித விதிகளில் கட்டுடைப்பு செய்து குமாரசாமி மூலம் ஜெயா தன்னை வழக்கில் இருந்து விடுவித்துக்கொண்டபோது, பலராலும் எதிர்பார்க்கப்பட்ட பால்கனி தரிசனத்துக்கே தகுதியற்ற உடல்நிலையில்தான் அவர் இருந்தார். வாரத்துக்கு ஒருமணி நேரம் கோட்டைக்கு வருவதும் அவர் சந்தித்ததாக போட்டோஷாப் செய்யப்பட்ட போலி புகைப்படங்கள் தருமளவுக்கு மக்களை முட்டாளாக்கிய சம்பவங்கள் நடந்தன. நியாயமாக தமிழக மக்கள் கொந்தளித்திருக்க வேண்டிய தருணம் அதுதான். ஊடகங்கள் உண்மையை தீவிரமாக புலனாய்வு செய்திருக்க வேண்டிய சூழலும் அப்போதுதான் இருந்தது.
  ஆனால் அப்போது கேள்வி எழுப்புபவர்கள்தான் நாகரீகமற்றவர்கள் என தூற்றப்பட்டார்கள். அந்த அதியுயர் ரகசியத்தை கட்டிக்காக்க ஊடகங்கள் அதிகபட்ச உழைப்பை செலுத்தின. அப்போது இருந்த ராஜ விசுவாசம் மட்டுப்பட்டு இப்போது சசியா தீபாவா எனும் விவாதம் எழுமளவுக்கு என்ன நடந்துவிட்டது? பயணிக்கும் சாலைகளில் இருக்கும் எல்லா பேனர்களிலும் சசிகலா முகம் கிழிபட்டிருக்கிறது. இப்படி பரவலான கோபம் தன்னெழுச்சியாக எழ சாத்தியம் இருப்பதாக நான் நம்பவில்லை. விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் செய்தி 3 மாதங்களாக வந்துகொண்டே இருக்கிறது. அதற்காக துவங்காத மக்கள் எழுச்சி ஜல்லிக்கட்டுக்கு நடக்கிறது. காரணம் மிகவும் எளிமையானது, அதனை ஊக்கப்படுத்தும் வகையிலும் முக்கியமான செய்தியாக வடிவம் கொடுப்பதன் மூலமே அது சாத்தியமாகியிருக்கிறது.
  இன்றைய கார்ப்பரேட் உலகில் பொதுக்கருத்து உருவாவதில்லை, உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கு ஆகச்சிறந்த உதாரணம் மோடி. ராகுல் காந்தி மற்றும் மோடியின் மேடைப்பேச்சையும் தோற்றத்தையும் ஒப்பிடுங்கள். இந்தியர்களை கவரும் நிறம், ஆங்கில ஞானம், மக்களின் வாரிசு வழிபாட்டு மனோபாவம்  எல்லாவற்றிலும் ராகுலுக்கு பல மைல் பின்னால் நிற்கிறார் மோடி. இருவரது பேச்சுக்களை மேலோட்டமாக ஒப்பிட்டால் மோடி ஒரு குப்பை பேச்சாளர் என்பது தெரியும். ஆனால் பொதுக்கருத்தில் என்ன இருக்கிறது? ராகுல் குழந்தை எனவும் மோடி பேசியே சாதிப்பவர் எனவும்தான் அறியப்படுகிறார்கள். மோடி மேடைப்பேச்சில் வல்லவர் எனும் கருத்து பரப்பப்பட்டு அதனை நம்பும்படியான செய்திகள் முக்கியத்துவம் தரப்பட்டது. பிறகு அவரது பேச்சு முக்கியமான செய்தியாகி அவரது கோமாளித்தனமான ஞானம் மறைக்கப்பட்டது. இன்னொரு புறம் ராகுல் காந்தி ஒரு பக்குவம் இல்லாத குழந்தை எனும் கருத்து பரப்பப்பட்டு அதனை உறுதிப்படுத்தும் சம்பவங்கள் பிரதான செய்தியாக்கப்பட்டது.
  ஒரு செய்தியறையின் தீர்மானங்கள் அவர்களுக்கு கிடைக்கும் செய்திகளை மட்டும் வைத்து உருவாவதில்லை. மற்ற ஊடகங்களின் செய்திகளையும் பரிசீலித்தே செய்தியின் முக்கியத்துவம் தீர்மானிக்கப்படுகிறது. இந்து நாளிதழின் முன்னால் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் நீக்கப்பட காரணம் அவர் சுப்ரமணியசாமி பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதும் கேரள பதிப்பில் மோடியின் கூட்டத்தை முதல் பக்க செய்தியாக போட ஒப்புக்கொள்ளவில்லை என்பதும்தான். மோடியின் ஸ்பான்சர்களில் பிரதானமானவரான அம்பானி சற்றேறக்குறைய 50 சேனல்களை வைத்திருக்கிறார். அவை மொத்தமும் ஒரு செய்தியை கவனப்படுத்த முடிவெடுத்தால் அது பெரும்பான்மை தலைப்புச்செய்தியாகிவிடும் அதனை மற்ற ஊடகங்களும் பின்தொடர்ந்தாக வேண்டும்.
  ஒரு கருத்தை உருவாக்குவது, அதனை நம்பவைக்கும்படியான செய்திகளை உற்பத்தி செய்வது, அதனை நிராகரிக்கும் செய்திகளை இருட்டடிப்பு செய்வது, எதிரிகளை ஓரம்கட்ட அவதூறு பரப்புவது ஆகியவை மூலம் ஒரு கழுதை விட்டையைக்கூட கடவுளாக்கிவிட முடியும் என்பதை மோடியின் வளர்ச்சி நிரூபணம் செய்திருக்கிறது. பத்திரிக்கையாளர் ஸ்வாதி சதுர்வேதி, எழுத்தாளர் சாத்வி கோஷ்லா ஆகியோரது வாக்குமூலங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
  தீபா விவகாரத்தில் நடப்பது இதற்கு சற்றே மாறான பிம்ப உருவாக்கம். ஜெ உயிரோடு- சுயநினைவோடு நடமாடும் வரையில் தீபாவை தன் அருகில்கூட நெருங்க விடவில்லை. ஜெவுக்கு தெரியாமல் அவர் தடுக்கப்பட்டார் என வைத்துக்கொண்டால், ஜெ தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றுகூட தெரியாத ஒரு வெத்துவேட்டு என பொருளாகிறது. போகட்டும் இனி ஜெ ஒரு வீண் சுமை. ஆனால் இப்போது ஜெயலலிதாவின் டூப்பாகவும் எம்ஜிஆரின் சித்தாந்த வாரிசாகவும் தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கும் தீபா ஜெ இருந்தவரை அவரைப் பார்க்க முடியாததைப் பற்றி வாயே திறந்ததில்லை, சசிகலா தன் அத்தையை தவறாக வழிநடத்துவதாக சொன்னதில்லை. அவர் தன்னை ஜெயாவின் வாரிசு என தைரியமாக அறிவித்துக்கொள்ள அத்தை செத்து திண்ணை காலியாகும் காத்திருந்திருக்கிறார்.
  தீபாவின் இதுவரைக்கும் செய்த அரசியல் பணிகள் என்ன? மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வருவேன் என்கிறார் அவர். மக்கள் தன் வருகையை விரும்பவேண்டும் என்பதற்கான எந்த நியாயமும் இல்லாமல், தன் பரம்பரை சொத்தை கேட்பதுபோல வெகு சாதாரணமாக அவரால் இதனை கேட்க முடிவது மிக மோசமான அறிகுறி. தன் அத்தையின் இறப்பு தொடர்பாக அவரால் வழக்கு தொடர்ந்திருக்க முடியும். தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை அம்பலப்படுத்த எல்லா தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டிருக்க முடியும். சசிகலாவின் ஊழல்களை பேசியிருக்க முடியும். அவை எதையும் இந்த திடீர் அம்மா செய்யவில்லை. அத்தையின் சொத்துக்களுக்கு (பிம்பம் உட்பட) எந்த சேதமும் இல்லாமல் அவர் அரசியல் செய்ய விரும்புவதை அவரது நேர்காணல்கள் உறுதிப்படுத்துகின்றன.
  ஒருசில நபர்களுக்கு மட்டும் எந்தவித கேள்விக்கும் உட்படுத்தாமல் அரசியல் முக்கியத்துவம் தருவதை தமிழ் ஊடகங்கள் தொடர்ந்து செய்துவருகின்றன. எம்.ஜி.ஆர், ஜெ, மோடி, சு.சாமி, குருமூர்த்தி என வளர்த்துவிடப்படுவோர் பட்டியலில் தீபா இப்போது இணைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பல மாவட்டங்களில் ஆதரவாளர்கள் எனும் பெயரில் ஃபிளக்ஸ் பேனர்கள் முளைக்கின்றன. தமிழ்நாடு – பெங்களூர் எல்லையில்கூட தீபா ஆதரவு போஸ்ட்டர்களை காண முடிகிறது. சேலத்தில் அவர் அரசியல் பணிகள் வெற்றிபெற அன்னதானம் நடக்கிறது. இவ்வளவு பெரிய முதலீடும் ஒருங்கிணைப்பும் எப்படி சாத்தியமாகிறது?
  இதனை உள்ளூர் தலைவர்கள் செய்கிறார்கள் என்றால், இதுவரை சம்பாத்தியத்துக்காக அரசியல் நடத்திய அவர்கள் இப்போது தீபாவை ஆதரிக்கிறார்கள் என்றாகிறது. அவர்கள் முதலீடு செய்யுமளவுக்கு தீபாவால் கிடைக்கும் லாபம் என்ன? இது தன்னெழுச்சியாக நடக்கிறது என்றால் அதனைவிட அசிங்கமான அரசியல் நிகழ்வு வேறொன்று இருக்க முடியாது. ரத்த சொந்தம் எனும் ஒற்றைத் தகுதியை வைத்துக்கொண்டு திடீர் பால்கனி தரிசன அரசியலை துவங்கியிருக்கும் ஒருவரை நம்பும் மக்கள் திரள் உருவாவது சசிகலா நடத்தும் குடும்ப அரசியல் அராஜகத்தைக்காட்டிலும் கேவலமானது.
  சிலர் சசிகலா தரப்பை எச்சரித்து பதவி பெற இதனை செய்கிறார்கள். இது ஒன்றுதான் தீபா ஆதரவு கும்பலில் தர்க்க ரீதியாக விளங்கிக்கொள்ள முடியும் குழு. மற்றவை எல்லாம் வலிந்து உருவாக்கப்படுபவை. கோயில் தர்மகர்த்தாவாக எவன் வேண்டுமானாலும் இருந்து தின்னட்டும் கருவறையில் மணியாட்டும் உரிமையை மட்டும் கேட்காதே எனும் பார்ப்பனீய சமரச மனோபாவத்தின் வெளிப்பாடுதான் தீபாவிற்கு கிடைக்கும் ஊடக முக்கியத்துவம். அவ்வளவு இலகுவாக ஜெவுடைய இடத்தை விட்டுக்கொடுக்க இவர்களுக்கு மனமில்லை. அதனால்தான் சசியின் ஊழல் வரலாற்றை மறைப்பதுபோலவே தீபாவின் திடீர் எழுச்சியின் பின்னுள்ள காரணங்களை தவிர்த்துவிட்டு அவர் வீட்டு வாசலில் குவியும் கூட்டத்தை பிரதானப்படுத்துகிறார்கள். அதன் விளைவுகளை பரவலாக பெண்களிடம் காணமுடிகிறது.
  ஜெயலலிதாவின் அரசியல் எழுச்சியின் மோசமான விளைவு மன்னார்குடி கும்பல் என்றால் அவரது மரணத்தின் மோசமான பின்விளைவு தீபா. எம்.ஜி.ஆரின் பணிகளை தொடர்வேன் என்பதும் தொண்டர்களின் எதிர்பார்ப்பு போலவே எனது பொதுவாழ்வு அமையும் என அவர் பேசுவதும் கேட்க சகிக்கவில்லை. எம்.ஜி.ஆரின் மோசமான நகலான ஜெயாவின் மிக மோசமான நகலாக உருவாக்கப்படுகிறார் தீபா. தேவர் மகன் சினிமாவில் சிவாஜி செத்து காரியம் செய்தஉடன் தாடியை சிரைத்துவிட்டு சின்ன சிவாஜியாகும் கமலைப்போல அத்தையின் கருமாதியை தகுதியாக்கி ஜெயாவாக உருமாறியிருக்கிறார் இளைய அம்மாவாகிய தீபாம்மா.
  வாரிசு அரசியல்தான் தமிழகத்தின் சாபக்கேடு என வாய் முதல் ஆசனவாய் வரை கிழியும் அளவுக்கு வகுப்பெடுத்தனர் குருமூர்த்தி வகையறாக்கள். இப்போது ஜெவின் ரத்த சொந்தம் எனும் தகுதியை வைத்து மட்டும் அவரது அரசியல் தளத்தை கைப்பற்ற முனையும் தீபாவைப்பற்றி பேசாமல் அவர்கள் ஒதுங்குவதில் இருந்தே இந்த பார்ப்பன கும்பலின் கபடத்தனத்தை விளங்கிக்கொள்ளலாம். தமிழ்நாடு இன்னொரு ஜெயலலிதாவை உருவாக்குமானால் அது இன்னொரு சசிகலாவையும் உருவாக்கும். ஒரு ஜெ-சசியின் சேதாரங்களை சரிசெய்யவே இன்னும் அரை நூற்றாண்டு ஆகும். ஆகவே ஜெ சீசன் 2 விளம்பரமான தீபாவை புரிந்துகொள்ளுங்கள், நம்பும் அப்பாவிகளிடம் அம்பலப்படுத்துங்கள்.
                                                                                                                         By: வல்லவன்.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad