Header Ads

  • BREAKING



    மேற்குத்தொடர்ச்சி மலையில் கல்குவாரிகள்: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் செயல்படும் கல்குவாரிகளுக்கு தடைகோரிய மனு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

    கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்த ஓ.ஓமர்லால் தாக்கல் செய்த மனு, யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்கு தொடர்ச்சி மலை மும்பையில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை 1,500 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. இந்த மலையில் பல இடங்களில் யானைகள், புலிகள் வாழிடங்கள் உள்ளன.

    மேற்குத்தொடர்ச்சி மலையால் கன்னியாகுமரி மாவட்டம் மழைப்பொழிவு பெற்று வருகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் கல்குவாரி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

    குவாரிகளால் மேற்குத்தொடர்ச்சி மலையின் அளவு சுருங்கி வருகிறது. வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்துகின்றன. 

    மலைப்பகுதி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் தமிழக அரசு மலைப்பகுதி பாதுகாப்புக் குழு அமைத்து 2003-இல் அரசாணை பிறப்பித்தது. அதன்படி மலைப்பகுதியில் அரசு, அரசு சார்புடைய துறையினர் பணி மேற்கொள்வதாக இருந்தால் பாதுகாப்புக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் அதுபோன்ற அனுமதி பெறாமல் குவாரிகளுக்கு அனுமதி வழங்குகின்றனர்.

    மேற்குத்தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசின் உயர்மட்டக்குழு ஆய்வு நடத்தி 2013-இல் அறிக்கை அளித்தது. அதில் மேற்கு தொடர்ச்சி மலை 6 மாநிலங்களில் 1,500 கிலோ மீட்டர் நிளம், 1 லட்சத்து 64 ஆயிரத்து 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. மலையை பாதுகாக்க குவாரி நடவடிக்கையை தடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தது. ஆனால் மலைப்பகுதியை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்புத் தொடர்பாக மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலரிடம் மனுதாரர் மனு அளிக்க வேண்டும். அவர் மனுவை பரிசீலித்து 2 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad