Header Ads

  • BREAKING



    சபாநாயகருக்கு எதிராக திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.

    தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை நீக்கக் கோரி, திமுக சார்பில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
    சட்டப்பேரவைத் தலைவர் தனபால் நடுநிலையாக செயல்படவில்லை என்று புகார் கூறிய திமுக, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடந்த 9ஆம் தேதி, சட்டப்பேரவை செயலாளர் ஜாமாலுதீனிடம் நோட்டீஸ் அளித்திருந்தது. அதன்படி, சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, தான் நடுநிலையுடன்தான் செயல்பட்டு வருவதாக தன்னிலை விளக்கம் அளித்த சபாநாயகர் தனபால், இருக்கையில் இருந்து எழுந்து சென்றார்.
    அதன்பின்னர், இருக்கையில் அமர்ந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தீர்மானத்தை முன்மொழியுமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்தை, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் வழிமொழிந்தார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், நடுநிலையுடன் தனபால் செயல்படுவார் என்று நம்பியதாகவும், ஆனால் அவ்வாறு நடக்காததால், தற்போது அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வேதனையுடன் கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.
    இதையடுத்து, சபாநாயகருக்கு எதிராக திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பில் திமுக கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்தார்.
    இதையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பிரிவு வாரியாக எண்ணிக் கணக்கெடுக்கும் முறையில் வாக்கெடுப்பை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
    இதை ஏற்றுக்கொண்ட துணை சபாநாயகர், பிரிவு வாரியாக எண்ணிக் கணக்கெடுக்கும் முறை வாக்கெடுப்பை நடத்தினார். அதில், தி.மு.கவின் தீர்மானத்துக்கு எதிராக 122 எம்.எல்.ஏ.க்களும், ஆதரவாக 97 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதில், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ், சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதையடுத்து, திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்தார்.
    சபாநாயகருக்கு எதிராக திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad