Header Ads

  • BREAKING



    குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மூன்றரை கிலோ தங்கக் கட்டிகள் திருட்டு.

    சென்னை சௌகார்பேட்டையில் நகைப்பட்டறையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூன்றரை கிலோ தங்கக் கட்டிகள் திருடப்பட்டது குறித்து போலீஸர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    சௌகார்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜீவ் புனியா. இவர் சௌகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் 4வது தளத்தில் நகைப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். தங்கக் கட்டிகளை வாங்கி, அதை நகைகளை செய்து நகைக்கடைகளுக்கு விற்கும் தொழில் செய்து வந்தார். மேலும் ஆர்டரின் பெயரில் பெரிய நகைக் கடைகளுக்கு பல கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை செய்து கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். 

    இவரது நகைப் பட்டறையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 9 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் அனைவரும் அங்கு தங்கியிருந்து வேலை செய்தனர். இவரது நகைப் பட்டறையில் இரவிலேயே பணிகள் நடைபெறுவது வழக்கம்.

    தங்கக் கட்டிகள் திருட்டு:

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இவர்களது நகைப் பட்டறையில் 9 தொழிலாளர்களும்,ராஜீவ் புனியாவும் நகை செய்யும் பணியில் இருந்தனர். இதற்கிடையே திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் அனைவரும் குளிர்பானம் அருந்தினர். இதன் பின்னர் ராஜீவ் புனியாவும், சில தொழிலாளர்கள் அங்கேயே மயங்கி விழுந்தனர்.

    இதற்கிடையே மயக்கம் தெளிந்து திங்கள்கிழமை நண்பகல் 1 மணியளவில் ராஜீவ் புனியா எழுந்தார்.அப்போது கடையில் 4 ஊழியர்கள் மயங்கி கிடப்பதும், மீதி 5 பேர் மாயமாகியிருப்பதையும் பார்த்தார். உடனே அவர், கடையின் பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அங்கிருந்த மூன்றரை கிலோ தங்கக் கட்டிகள் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனே அவர்,இது குறித்து யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸர் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸர் நடத்திய விசாரணையில் கிடைத்த முதல் கட்டத் தகவல்கள்:

    மேற்கு வங்க இளைஞர்கள்:

    ராஜீவ் புனியா கடையில் மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள பதனிப்பூரைச் சேர்ந்த சிக்கந்தர்,ஆசிப்,சல்மான்,மைதீன்,நூர்ஜமால் ஆகிய 5 பேர் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் 5 பேரும் தான் திட்டமிட்டு ராஜீவ் புனியா நகைப்பட்டறையில் இருந்த மூன்றரை கிலோ தங்கக் கட்டிகளை திருடியுள்ளனர்.

    நகையை திருடுவதற்காக ஏற்கனவே திட்டமிட்டிருந்த 5 பேரும், அதற்கு மயக்க மருந்தை வாங்கி தயார் நிலையில் வைத்திருக்கின்றனர். திங்கள்கிழமை அதிகாலை ராஜீவ்புனியா குளிர்பானம் வாங்குவதற்கு ஆளை அனுப்பியதும், ராஜீவ்புனியாவுக்கும், அவர்களுடன் சேராத 3 தொழிலாளர்களுக்கும் மட்டும் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அருந்த கொடுத்திருக்கின்றனர்.

    குளிர்பானத்தை அருந்தியதும் ராஜீவ் புனியா உள்ளிட்ட 4 பேரும் மயங்கியிருக்கின்றனர். உடனே 5 பேர் கும்பல், அங்கிருந்த மூன்றரை கிலோ தங்கக் கட்டிகளை திருடிக் கொண்டு தப்பியோடியிருக்கிறது.

    இந்தக் கும்பல் திருட்டில் ஈடுபடும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதை போலீஸர் கண்டறிந்துள்ளனர். அந்தக் காட்சியை போலீஸர் கைப்பற்றி, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இவர்கள் 5 பேரையும் கைது செய்வதற்கு தனிப்படை போலீஸர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad