Header Ads

  • BREAKING



    திருப்பத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டு ஆலையில் விபத்து: இருவர் சாவு.

    திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி இயங்கிய நாட்டு வெடிகுண்டு தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
    ஜோலார்பேட்டையை அடுத்த மூக்கனூர் ஊராட்சி அடியத்தூர் பகுதியில் உள்ள ஆனந்தனுக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் ஆலை அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுரங்கம் (43), காந்தி (32) உள்பட பத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில் அங்கு பொன்னுரங்கமும், காந்தியும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கர சப்தத்துடன் வெடிகுண்டுகள் வெடித்ததில் ஆலை பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் பொன்னுரங்கம், காந்தி ஆகிய இருவரும் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜோலார்பேட்டை போலீஸார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இருவரின் சடலங்களையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 
    இறந்த பொன்னுரங்கத்துக்கு மனைவி லட்சுமி, குழந்தைகள் கலைமணி (8), கீர்த்தி (7), பிரீத்தி (பத்து மாத குழந்தை) ஆகியோரும், காந்திக்கு இந்திரா என்ற மனைவியும், ஜீவா (7), அபினேஷா (5) ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.
    சம்பவ இடத்தை டிஐஜி தமிழ்சந்திரன், மாவட்ட எஸ்.பி. பகலவன், திருப்பத்தூர் சார் ஆட்சியர் கார்திகேயன், டிஎஸ்பி பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வெடி ஆலை விபத்து ஏற்பட்டபோது சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு பயங்கர சப்தம் கேட்டது. அப்போது நில அதிர்வு ஏற்பட்டதுபோல் உணரப்பட்டது.
    மேலும், அருகில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட கூரை வீடுகளின் மேல் பகுதிகள் உடைந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இப்பகுதியில் வெடிகுண்டு ஆலை நடத்தி வருகின்றனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad