Header Ads

  • BREAKING



    BSNL முறைகேடு, ஏப்ரல் 1-இல் நேரில் ஆஜராக தயாநிதி மாறனுக்கு உத்தரவு.

    பிஎஸ்என்எல் அதிவேக இணைப்புகளை சட்ட விரோதமாக பயன்படுத்திய வழங்கியதால் அரசுக்கு ரூ.1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் குற்றப்பத்திரிகையை பெற ஏப்ரல் 1-ஆம் தேதி சென்னை 14-ஆவது சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, கடந்த 2004-07-ஆம் கால கட்டத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோபாலபுரம், போட் கிளப் சாலையில் உள்ள வீடுகளில் சட்ட விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட இணைப்பகம் (எக்சேஞ்ச்) நடத்தியதாகவும், இந்த இணைப்புகள் சன்டிவிக்கு பயன்படுத்திய வகையில், பிஎஸ்என்எல்.க்கு ரூ.1.78 கோடி அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    பின்னர், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக, இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    அதன்படி, தயாநிதிமாறன், சென்னை பிஎஸ்என்எல் பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப்பொதுமேலாளர் எம்.பி.வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளராக இருந்த கெளதமன், சன் டிவி ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது தில்லி சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீசியன் ரவி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கெளதமன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் கைது செய்தனர்.

    இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்தாண்டு தில்லி சிபிஐ போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சென்னை சிபிஐ 14-ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையைப் பெற, ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10.30-மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad