Header Ads

  • BREAKING



    கம்ப்யூட்டர் புரோகிராமர் என்ற அடிப்படையில் மட்டுமே இனி எச்1பி விசா பெறமுடியாது!

    அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு, கம்ப்யூட்டர் புரோகிராமர் என்ற அடிப்படையில் இனி எச்1பி விசா பெறமுடியாத நிலை உருவாகியுள்ளது.
    வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்ற அடிப்படையில் தொழில்நுட்பத் திறமை வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும் இந்த எச்1பி விசா மூலம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கானவர்களை அமெரிக்காவில் பணியில் அமர்த்துகின்றன. இந்த எச்1பி விசா முறையால், ஒப்பீட்டளவில் குறைந்த ஊதியத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பணியாளர்களை கொண்டுவருவதாகவும், அமெரிக்கர்களுக்கு பணிவாய்ப்புகள் பறிபோவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. எனவே எச்1பி விசா முறை மேலும் கடுமையாக்கப்படும் என்றும், அமெரிக்கர்களுக்கு பணிவாய்ப்புகள் பாதுகாக்கப்படும் என்றும் அதிபர் தேர்தலின்போது டிரம்ப் உறுதியளித்திருந்தார்.
    இதனடிப்படையில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்1பி முறையை கடுமையாக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, எச்1பி விசா தொடர்பாக பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கம்யூட்டர் புரோகிராமர் என்ற தகுதியில் மட்டும் இனி எச்1பி விசா பெறமுடியாது. கம்ப்யூட்டர் புரோகிராமர் என்பதோடு, அமெரிக்காவில் ஆற்ற உள்ள பணிக்கு தனிச்சிறப்பு மிக்க, தனித்திறன் தன்னிடம் உள்ளது என்பதையும் நிரூபிக்க வேண்டும். 2017ஆம் ஆண்டுக்கு எச்1பி விசா பெறுவதற்கு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், அந்த விண்ணப்பங்கள் நேற்றுமுதல் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோல, எச்1பி விசா முறையில் நடைபெறும் முறைகேடுகளையும், மோசடியையும் தடுப்பதற்காக பல்வேறு புதிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன. அதிக எண்ணிக்கையில் எச்1பி விசா பணியாளர்கள் உள்ள பணியிடங்களில் ஆய்வுகள் நடத்தப்படும் என்றும், பிற நிறுவனங்களுக்கு ஐடி பணிகளை செய்து தரும் ஊழியர்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எச்1பி விசா முறையை கடுமையாக்கும் இந்த நடவடிக்கைகளால் காக்னிசன்ட், இன்போசிஸ், விப்ரோ, அக்செஞ்சர் உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் பாதிப்பை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad