Header Ads

  • BREAKING



    துணைவேந்தர் பதவிகள் ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரை விலை பேசி விற்பனை! ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு.

    துணைவேந்தர் பதவிகள் ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரை விலை பேசி விற்பனை செய்யப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
    தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் பெலிக்ஸ் நியமிக்கப் பட்டதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. தகுதியும், திறமையும் நிறைந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு, ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதால்   குற்றச்சாற்றுக்கு உள்ளானவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிய முனைவர் பாஸ்கரன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வுபெற்றார். அதன்பின் 5 மாதங்களாகியும் புதிய துணைவேந்தரை நியமிக்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் இருப்பதை பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து மீன்வளப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் பெலிக்ஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். மீனவளப் பல்கலைக்கழகத்திற்கு ஓராண்டுக்குப் பிறகு துணைவேந்தர் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. ஆனால், பல குற்றச்சாற்றுகளுக்கு உள்ளான ஒருவர் அப்பதவிக்கு வந்திருப்பது வருத்தமளிக்கிறது.

    துணைவேந்தர் பதவிக்காக, பெலிக்ஸ் சார்பில் முதல்வர் அலுவலகத்தில் செயலராக பணியாற்றி வரும் அதிகாரி மூலம் ரூ.3 கோடி கையூட்டு தரப்பட்டிருப்பதாக குற்றச்சாற்று எழுந்திருக்கிறது. புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பெலிக்ஸ் 2008-09ஆம் ஆண்டு மீன்வளக் கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணியாற்றிய போது, அவர் மேற்கொண்ட ஆய்வுத் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாற்று எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அவரது துறைத்தலைவர் பரிந்துரைத்திருந்தார். அக்குற்றச்சாற்றுகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஆட்சியாளர்களின் உதவியுடன் புகார்கள் குறித்த கோப்புகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, பொன்னேரியிலுள்ள அரசு மீன்வளக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். 

    பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் முதல்வராக பதவியேற்ற பிறகு அங்கு பணியாற்றிய ஆசிரியர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டது, பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவி ஒருவர், மாதவரம் மீன்வள ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் ஓர் அலுவலக உதவியாளர் உட்பட பல பெண்களிடம் தவறாக நடது கொண்டது குறித்த குற்றச்சாற்றுகளும்  நிலுவையில் உள்ளன. பல்கலைக்கழகம் என்பது கல்வியை மட்டுமின்றி ஒழுக்கத்தையும் கற்றுத்தரும் ஆலயம் ஆகும். அத்தகைய கல்விக்கோவிலுக்கு பாலியல் புகாரில் சிக்கிய ஒருவரை துணைவேந்தராக நியமிப்பது எந்த வகையில் சரியான நடவடிக்கை ஆகும்? என்பதை தமிழக ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad