Header Ads

  • BREAKING



    சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக மறியல்: போலீஸ் தடியடியில் பெண்கள் உள்பட 20 பேர் படுகாயம்.

    திருப்பூர் அருகே மதுக் கடையை மூடக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்திய தடியடியில் பெண்கள் உள்பட 20 பேர் பலத்த காயமடைந்தனர்.
    திருப்பூர் மாவட்டம், மங்கலம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட சாமளாபுரம் பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் மதுக் கடை மூடப்பட்டது.
    அதற்குப் பதிலாக, சாமளாபுரம், நான்கு சாலை சந்திப்பு அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் புதிய மதுக் கடை செவ்வாய்க்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. அந்த மதுக் கடையை மூடக் கோரி, சாமளாபுரம் பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் நான்கு சாலை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனர்.
    இந்தச் சந்திப்பானது, திருச்சி - கோவை, சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் பகுதியாகவும், காரணம்பேட்டை, மங்கலம் செல்லும் பிரதான சாலைகள் சந்திக்கும் பகுதியாகவும் உள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மங்கலம் போலீஸார் சாலைமறியல் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் சாலை மறியல் தொடர்ந்தது.
    அதைத் தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையில் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். கூடுதலாக ஆயுதப்படையினரும் சிறப்பு பாதுகாப்புப் படைப் பிரிவினரும் குவிக்கப்பட்டனர்.

    சட்டப் பேரவை உறுப்பினரின் வாகனம் முற்றுகை: மறியல் போராட்டம் நடைபெற்றபோது, அவ்வழியே சூலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கனகராஜ் காரில் சென்றார். இதையறிந்த பொதுமக்கள், அவரது காரை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து, அவரும் பொதுமக்களுடன் சேர்ந்து மறியலில் ஈடுபட்டார்.
    போராட்டத்தில் பங்கேற்ற சட்டப் பேரவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளதாகக் கூறிவிட்டு, சட்டப் பேரவை உறுப்பினர் கனகராஜ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
    அவர் சென்ற சிறிது நேரத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையிலான அதிகாரிகள், மறியலைக் கைவிடுமாறு மக்களிடம் அறிவுறுத்தினர். முன்னதாக, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராஜன் அங்கு சென்று, மதுக் கடையை அகற்றுவதாக உறுதியளித்தார். ஆனால், தங்களுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

    போலீஸ் தடியடி: செவ்வாய்க்கிழமை மாலையாகியும் மக்கள் போராட்டத்தைக் கைவிடாத நிலையில், பாண்டியராஜன் தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர்.
    இந்தத் தடியடியால் பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சாமளாபுரத்தைச் சேர்ந்த சிவகணேஷுக்கு மண்டை உடைந்தது. அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரியை, கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தாக்கியதில் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.

    போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மீதும் போலீஸார் தாக்குதல் நடத்தினர். இதில், காட்சி ஊடக ஒளிப்பதிவாளர்கள் இருவர் காயமடைந்தனர். அவர்களின் கேமராக்களும் சேதமடைந்தன.

    உண்ணாவிரதம்: போலீஸ் தடியடியைக் கண்டித்து, சாமளாபுரம் பகுதியில் ஈஸ்வரன் கோயில் அருகே சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கினர். இந்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை இரவு வரை தொடர்ந்தது.

    செய்தியாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் செய்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தனர்.

    காவல் கண்காணிப்பாளர் விளக்கம்: இதுகுறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.உமா கூறியதாவது:
    மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தப்பட்டது. நேரம் செல்லச் செல்ல, பொதுமக்கள் கூட்டத்தில் புகுந்த சிலர், போலீஸார் மீது கற்களை வீசினர். அதனால்தான் தடியடி நடத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad