Header Ads

  • BREAKING



    நெடுஞ்சாலை ஓரங்களில் இயங்கி வந்த 3 ஆயிரத்து 300 மதுக்கடைகள் மூடப்பட்டன.

    உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் 500 மீட்டர் தொலைவிற்குள் அமைக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளை டாஸ்மாக் நிர்வாகம் மூடியுள்ளது.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், தேசிய நெடுஞ்சாலையில் இயங்கிவந்த 4 மதுபானக் கடைகள் நேற்றிரவுடன் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மதுபானக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால், பொதுமக்கள், பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெடுஞ்சாலையில் மூடப்பட்டுள்ள மதுபானக் கடைகளை, வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து, ஆலோசனைக்குப் பின் முடிவு செய்யப்படும் என, டாஸ்மாக் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
    சேலம் மாவட்டத்தில் 90 மதுபானக் கடைகளும், மாநகரத்தில் 45 மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதன்மூலம், அரசுக்கு நாள்தோறும் சுமார் 2 கோடியே 70 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலையிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வந்த சுமார் 126 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் மதுபானக் கடைகளின் மூலம் நாள்தோறும் சுமார் 2 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துவந்த நிலையில், தற்போது முடப்பட்டுள்ள கடைகளின் மூலம் சுமார் 70 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. மூடப்பட்ட மதுபானக் கடைகளில் பணிபுரிந்த சுமார் 250 பணியாளர்களுக்கு, மாற்றுக் கடைகளில் பணி வழங்கப்பட உள்ளது.
    திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமாக இயங்கிவரும் 230 மதுபானக் கடைகளில்,நெடுஞ்சாலை ஓரங்களில் செயல்பட்டு வந்த 162 கடைகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட மதுபானக் கடைகளில் பணிபுரிந்து வந்த ஊழியர்களின் நிலைமை கேள்விகுறியாகியுள்ள நிலையில், விரைவில் மாற்று இடங்களை தேர்வு செய்து மதுபானக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, அனுமன் தீர்த்தம், சிங்காரப்பேட்டை, காரப்பட்டு, பெரிய தள்ளபாடி, மகனூர் பட்டி, கெங்கிராம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை ஓரத்தில் இயங்கிவந்த சுமார் 20 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள மதுபானக் கடைகளை, மாற்று இடங்களில் அமைப்பதற்கான முயற்சிகளில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad