Header Ads

  • BREAKING



    மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் 4வது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக்: அத்தியாவசிய பொருள் விலை 50% உயர்வு.

    பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணம் உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும், காப்பீடு தொகையை உயர்த்தக்கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய 6 மாநிலங்களில் தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 30ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த போராட்டத்தால், தமிழகத்தில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டுக்கு வரவேண்டிய காய்கறி லோடு 70 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேட்டிலேயே இந்த நிலைமை என்றால், சென்னையின் மற்ற பகுதிகளில் சில்லரை வியாபாரி சொல்வது தான் விலை. குறிப்பாக புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், சந்தோஷ்புரம், வேளச்சேரி உள்பட பல இடங்களில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. 
    அதே போன்று பெரும்புதூர் தொழிற்சாலைகளிலும் கடந்த 3 நாட்களாக கோடிக்கணக்கில் சரக்குகள் தேங்கி கிடக்கின்றன. ஏராளமான கூலி தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு பறி போயுள்ளது. தொழில் நகரங்களான கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் லாரி இயங்காததால், கோடிக்கணக்கான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. வேலை நிறுத்த போராட்டம் தொடங்கிய நாளன்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி லாரி உரிமையாளர்களை அழைத்து பேசினார். அப்போது கூட வேலை நிறுத்தத்தை கைவிடுங்கள் என்று அமைச்சர் கூறினாரே தவிர, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கவில்லை என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்தது. 
    இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்  யுவராஜ் கூறியதாவது : “லாரி ஸ்டிரைக் தொடர்ந்து வரும் நிலையில், வேன், கார், தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் எங்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சென்னை மெட்ரோ வாட்டர் லாரி உரிமையாளர்களும் 4 நாள் போராட்டம் தொடர்ந்தால், ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதாக தெரிவித்துள்ளனர். அதன்படி நாளை (இன்று) நான்காவது நாளாக போராட்டம் தொடர்கிறது. எனவே அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து எங்கள் கோரிக்கைகளை நிராகரித்து வருவது கண்டனத்துக்குரியது” என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad