Header Ads

  • BREAKING



    கோகுலம் நிதி நிறுவனத்தின் 78 அலுவலகங்களில் வருமான வரி சோதனை- அரசியல் பிரமுகர்கள் கலக்கம்.


    சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் கோகுலம் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 78 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை அரசியல் பிரமுகர்களையும், சினிமாதுறையினரையும் கலங்கடித்துள்ளது.
    சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு தென்னிந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோகுலம் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் அரசியல் பிரமுகர்கள், சினிமாதுறையை சேர்ந்தவர்கள், தொழில் அதிபர்கள் , வெளி நாடுவாழ் இந்தியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர்.
    புதன்கிழமை காலைமுதல், தமிழகம், கர்நாடக, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வரும் அந்நிறுவனத்தின் 78 அலுவலகங்களில் 500க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் மத்தியப் படை பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், டிரஸ்ட்புரத்தில் உள்ள கோகுலம் நிறுவன உரிமையாளர் கோபாலன் வீடு, அசோக் நகரில் உள்ள கோகுலம் பார்க் விடுதி என சென்னையில் மட்டுமே 36 இடங்களில் சோதனை நடந்தது. கேரளாவில் 29 இடங்கள், பெங்களூரில் 5 இடங்கள், கோவையில் 5 இடங்கள், புதுச்சேரியில் 2 இடங்கள் என இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோகுலம் நிதி நிறுவனத்தில் நடக்கின்ற வருமானவரி சோதனை குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
    கடந்த நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்புக்கு பின்னர் இந்த நிதி நிறுவனத்தின் செயல்பாடுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர் வருமானவரித்துறையினர்.
    கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவர மத்திய அரசு நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் கோகுலம் நிதி நிறுவனம் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா துறையினர் பலரிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுக்களை பெற்று குறிப்பிட்ட சதவீத கமிஷனுக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக்கொடுத்துள்ளது என்கின்றனர். இது தொடர்பாக 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணப்பறிமாற்றம் நடந்திருப்பதை கண்டறிந்துள்ளனர் வருமானவரித்துறையினர்.
    அதிலும் குறிப்பாக கேரளாவை தலைமையிடமாக கொண்ட கத்தோலிக்கன் சிரியன் வங்கியில் இருந்து மட்டும் இந்த நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களின் முதலீடு என்று பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்துவிட்டு 3000 கோடி ரூபாய்க்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
    மேலும் இந்த பணபறிமாற்ற நடைமுறைகளுக்கு எந்தவிதமான முறையான கணக்கு வழக்குகளும் கோகுலம் நிதி நிறுனத்திடம் இல்லை என்றும் அவர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு கருப்பு பணத்தை மாற்றிக்கொடுத்து ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர் வருமானவரித்துறையினர்.
    எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த சில வருடங்களாக கோகுலம் நிதி நிறுவனம் தாங்கள் கையாளும் பணத்துக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது வருமானவரித்துறை வட்டாரங்கள்.
    இந்த நிதி நிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை மாற்றிய அரசியல் பிரமுகர்கள் குறித்த முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் அரசியல்வாதிகளும் சினிமாதுறையினரும் கலக்கத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனைக்கு அடுத்தபடியாக கோகுலம் நிதி நிறுவனம் வருமானவரித்துறையினரின் பிடியில் சிக்கி இருப்பது குறிப்பிடதக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad