Header Ads

 • BREAKING  விவசாய வருமானம்: இந்த ஏமாற்று வேலைகள் இன்னும் எத்தனை காலங்களுக்கு தொடரப்போகிறது???


  விவசாயம் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும், என்ற திட்டத்தை மத்திய அரசுக்கு இன்று நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் டெப்ராய் பரிந்துரைத்துள்ளார்.
  இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகிய ஒரு மணி நேரத்திற்குள்ளாக-
  அவசர அவசரமாக மத்திய நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி ட்விட்டர்
  மூலம் ஒரு மறுப்பு செய்தியை வெளியிடுகிறார்.
  மத்திய அரசுக்கு விவசாயம் மூலமாகப் பெறப்படும் வருவாய்க்கு வரி விதிக்கும் எந்த எண்ணமும் இல்லை என்று அவசரமாக ட்வீட் செய்கிறார்.!!!
  நிதி ஆயோக் என்பது, பாஜக அரசு பதவிக்கு வந்தபின்,
  மோடி மற்றும் ஜெட்லிஜியின் கூட்டு ஆலோசனையின் பேரில்
  பழைய திட்டக்கமிஷனை ஒழித்து விட்டு – தங்களுக்கு பிடித்த பனகாரியாவைத் தலைவராகப் போட்டு உருவாக்கிய ஒரு மாற்று பெயரிலான திட்டக்கமிஷன் தான்.! இதில் ஒரு ஆலோசனை சொல்லப்பட்டால், உரிய முறையில் அரசாங்கம் பரிசீலித்து விட்டு, ஏற்றுக்கொள்வதோ, நிராகரிப்பதோ – தகுந்த காரணங்களுடன் அதை விளக்குவதோ தானே நடைமுறை…. ?
  ஒரு ஆலோசனை செய்தி ஊடகங்களில் வெளிவந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக அவசர அவசரமாக நிதியமைச்சர் இந்த மாதிரி யோசனை எதுவும் இல்லை என்று மறுப்பு தெரிவிப்பது ஏன்…?
  இந்தியாவில் விவசாய வருமானம் என்கிற போர்வையில் வரி கட்டாமல்
  ஏய்த்துக் கொண்டிருக்கும் பணக்காரர்களை காக்க அவ்வளவு அவசரமா…?
  விவசாய வருமானம் குறித்த கீழ்க்காணும் விவரங்களை படித்தால், அரசு அவசர அவசரமாக “விவசாய வரி என்கிற பேச்சுக்கே இடமில்லை” என்று சொல்வது யாரைக்காக்க என்பது புரிய வரும்….!!!
  இரண்டாயிரம் லட்சம் கோடி ரூபாய் – இங்கு கொஞ்சம் நிறுத்தி, நிதானமாக மீண்டும் ஒருமுறை படித்து – தகவலை நெஞ்சில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.
  இரண்டாயிரம் லட்சம் கோடி ரூபாய்… என்றால் எவ்வளவு ? 
  இப்படி யோசியுங்கள் –
  முதலில் ஒரு கோடி….
  பிறகு பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம் கோடி-
  லட்சம் கோடிகள்….
  பிறகு ஆயிரம் லட்சம் கோடி…
  பிறகு இரண்டாயிரம் லட்சம் கோடி….
  தலை சுற்றுகிறதா …?
  இது என்ன….?
  2013-14 நிதியாண்டில் மத்திய அரசுக்கு வருமான வரிக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டிய – ஆனால், எடுத்துக் கொள்ளப்படாத மொத்த தொகை.
  இதற்கு எந்த ஒரு தனி கட்சியையும் பொறுப்பாக்க முடியாது. தொடர்ந்து ஆட்சிக்கு வரும் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அரசுகள், தெரிந்தே அனுமதிக்கும் (A fraud on the nation…and its loyal citizens)

  இது எப்படி நடக்கிறது….?
  சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்தே, விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, விவசாயத்திலிருந்து வரும் வருமானம் முழுவதற்கும், வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
  இப்படி ஒரு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதற்கான எந்தவித கட்டாயமும் இல்லை. இவர்களாகவே எடுத்த கொள்கை ( ? ) முடிவு தான்…!
  அரசியல் சட்டத்தை இவர்கள் துணக்கு காரணம் காட்ட அழைக்கலாம்.
  அரசியல் சட்ட விதிகள் இதுவரை எவ்வளவு நூறு முறை
  மாற்றப்பட்டிருக்கின்றன… !
  நாட்டின் நலனை முன்னிட்டு, இன்னொரு மாற்றம் கொண்டு வருவதில் பிரச்சினை என்ன…?
  உண்மையான விவசாயிகள் எத்தனை பேருக்கு இன்று வருமான வரி கட்டும் அளவிற்கு வருமானம் வருகிறது …?
  கீழே கொடுக்கப்பட்டிருப்பவை இது குறித்த சில அதிகாரபூர்வமான புள்ளி விவரங்கள்.
  வருமான வரி இலாகாவில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ( IRS )அதிகாரி விஜய் சர்மா என்பவர் தகவல் பெறும் உரிமை சட்ட உதவியோடு ( under RTI act ) பெற்ற விவரங்கள்.
  விவசாயிகள் அனைவருமே வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதில்லை. வருமான வரி வரம்பிற்கு மேலாக வருட வருமானம் உள்ளவர்கள் மட்டுமே தாக்கல் செய்கிறார்கள்.
  2011-ஆம் ஆண்டில் அப்படி தாக்கல் செய்த நபர்களின் ( விவசாயிகளின்…? ) மொத்த எண்ணிக்கை 6.57 லட்சம்.
  இவர்கள் விவசாயத்தின் மூலம் சம்பாதித்ததாக (..? ) காட்டி இருக்கும் மொத்த தொகை – இரண்டாயிரம் லட்சம் கோடி ரூபாய்.
  சில கேள்விகள் எழுகின்றன??? இந்த அளவிற்கு விவசாயத்திலிருந்து சம்பாதிக்கும் விவசாயிகள் நம் நாட்டில் இருக்கிறார்களா ?
  இவ்வாறு விவசாயத்திலிருந்து வருமானம் கிடைத்துள்ளதாக சொல்பவர்களிடம்???
  அவர்கள் நிலம் எங்கே இருக்கிறது ?
  அந்த நிலம் அவர்களின் பெயரிலேயே இருக்கிறதா…?
  குத்தகை என்றால்- யாருக்கு சொந்தமானது ?
  அதன் அளவு என்ன ?
  அதில் எவ்வளவு பேர் உழைக்கிறார்கள்…?
  அந்த நிலத்தில் என்ன பயிர் விளைவிக்கிறார்கள் ?
  அதை எங்கே-யாருக்கு, எப்படி விற்கிறார்கள்… ?
  இது போன்ற விவரங்களை எல்லாம் வருமான வரி இலாகா ஏன் கேட்டுப் பெறுவதில்லை….?
  இந்த பட்டியலில் இருப்பவர்களில் எத்தனை பேர் உண்மையான விவசாயிகள்  எத்தனை பேர்?? விவசாயி என்கிற போர்வையில் வருமானத்தை
  பதுக்கும் கருப்பு பணக்காரர்கள், அரசியல்வாதிகள்…?
  விவசாய வருமானம் காட்டும் ஒவ்வொரு நபரிடமும் இந்த கேள்விகளை எழுப்பி விவரங்களை தெரிந்து, verify செய்து வைத்துக் கொள்வது,
  வருமான வரி இலாகாவின் அடிப்படை அவசியம்.
  ஏனென்றால், பிற வழிகளில் சம்பாதிக்கப்படும் கருப்புப் பணம், ( வக்கீல்கள், டாக்டர்கள், ரியல் எஸ்டேட் முதலாளிகள், திரையுலக பிரமுகர்கள்,
  பெரும் நடிகர்கள் etc. etc.) வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு,
  அவ்வப்போது நாட்டிற்குள்ளே கொண்டு வரப்படும் கருப்புப் பணம் ஆகியவை,
  விவசாய வருமானமாக காட்டப்பட்டு வெள்ளையாக்கப்படக்கூடிய
  அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.
  இதுவரை, மத்திய அரசு, இத்தகைய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. இந்திய சரித்திரத்திலேயே பொய்யாக விவசாய வருமானம் காட்டியதாக இதுவரை யார் மீதும் நடவடிக்கை
  எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 
  2006 -ஆம் ஆண்டிலிருந்து, தொடர்ச்சியாக ஆண்டிற்கு ஆண்டு, விவசாய வருமானம் காட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது.
  ( குளிர் விட்டுப் போய் விட்டது… எந்த கேள்வியும் இல்லை. சுலபமாக கருப்பை வெள்ளையாக்கலாம்…! )
  2006 – 85 நபர்கள்
  2007 – 78,794 நபர்கள்
  2008 – 2,05,671 நபர்கள்
  2009 – 2,45,731 நபர்கள்
  2010 – 4,25,085 நபர்கள்
  2011 – 6,56,944 நபர்கள்
  2012 – 8,12,426 நபர்கள்
  2013 – 9,14,506 நபர்கள்
  அவர்கள் அத்தனை பேருக்கும் வரம்பே இல்லாமல் ஒட்டுமொத்தமாக வரிவிலக்கு அளிக்க வேண்டிய அவசியம் என்ன …?
  விவசாயத்திற்கு உதவி செய்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டால் கூட –
  அதிக பட்சம் ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் என்று வைத்துக் கொண்டால், வருடத்திற்கு 12 லட்சம். ஆண்டிற்கு 12 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறும் பணக்கார விவசாயிகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டியதன் அவசியம் என்ன ?
  ( விவசாயம் அல்லாத வகைகளில் வருமானம் பெறுபவர்களின் வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு 2.5 (இரண்டரை )லட்சம் தான்.. இதற்கு மேல் பத்து ரூபாய் சம்பாதித்தால் கூட சட்டப்படி வருமான வரி கட்டியாக வேண்டும்.)
  இந்த RTI தகவல் பெற்ற ஓய்வுபெற்ற அதிகாரி திரு.விஜய் சர்மா, இது குறித்து வருமான வரி இலாகாவிற்கு கடந்த ஒரு வருடத்தில் பல கடிதங்கள் எழுதியும், முறையான நடவடிக்கைகள் இல்லாததால்,
  பாட்னா (பீஹார்) உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு
  தொடர்ந்திருக்கிறார்.
  இதன் பின்னர் விழித்துக் கொண்ட மத்திய அரசு சில தகவல்களை சேகரிக்கத் துவங்கி இருக்கிறது.
  வருமான வரி இலாகா – ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக ( அது ஏன் ஒரு கோடி …? ) விவசாய வருமானம் காட்டி இருக்கும் நபர்களிடம் விசாரணைக்காக, சில தகவல்களைக் கோரி இருக்கிறது.
  2014-15-ஆம் ஆண்டில் 307 நபர்கள் ஒரு கோடிக்கு மேல் விவசாய வருமானம் காட்டி இருக்கிறார்களாம்.
  ஆண்டிற்கு ஆயிரம் கோடி, ரெண்டாயிரம் கோடி எல்லாம் விவசாய வருமானம் காட்டுபவர்களிடம் கருணை என்ன வேண்டிக் கிடக்கிறது ….?
  அவர்களும் மற்ற சாதாரண நபர்களைப் போல் 30 % வருமான வரி கட்டுவது தானே நியாயம் ?
  கருப்புப் பணத்தை விவசாய வருமானமாக காட்டி விட்டு, சர்வ சகஜமாக, சமுதாயத் திருடர்கள் கடந்து போவதை, அரசு எப்படி சகித்துக் கொள்கிறது …?
  இதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். கட்சி வேறுபாடு இல்லாமல், அனைத்து அரசியல்வாதிகளுக்கும் – இதில் பங்கு, ஆதாயம் இருக்கிறது…!
  இதனால் பலன் அடைபவர்கள் – பெரும் பணக்காரர்களும், அரசியல்வாதிகளுமே என்பது தானே காரணம் ?
  பெரும்பாலான, சாதாரண பொது மக்களுக்கு இந்த ஏமாற்று வேலைகள், கொள்ளைகள் பற்றி எல்லாம் ஒன்றுமே தெரியாது.
  நம்மைப் போன்றவர்களுக்கு கூட, ஓரளவு “கோல்மால்” நடக்கிறது என்பது
  தெரியுமே தவிர, இவ்வாறு இரண்டாயிரம் லட்சம் கோடி அளவிற்கு எல்லாம் ஏமாற்று வேலை நடக்கிறது என்பதை கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். RTI தகவல் வெளியிடப்பட்டதால் தான் –
  இப்போது, இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
  இந்த ஏமாற்று வேலைகள் எல்லாம் இன்னும் எத்தனை
  காலங்களுக்கு தொடரப்போகிறது….?
  கண்டதை எல்லாம் வெட்டியாக விவாதிக்கும் ஊடகங்கள் இது குறித்து பொருளாதார நிபுணர்களை வைத்து உருப்படியாக விவாதித்து கருத்து உருவாக்கம் செய்தால் என்ன….?
  குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வரக்கூடிய விவசாய வருமானத்தையும்,
  வருமான வரி சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஊடகங்கள் அனைத்தும் சேர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  இதற்கு அரசியல் கட்சிகளை நம்பிப் பயன் இல்லை. அனைத்து கட்சிகளிலும்,
  பணக்கார விவசாயிகள் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள்….
  கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு…
  அவர்களிடம் மட்டுமே ஆதரவை எதிர்பார்க்கலாம்….!
                                                                                                               BY: காவிரிமைந்தன்.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad