Header Ads

  • சற்று முன்



    ஏழைகளின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி வேறு எங்கோ செல்கிறது: உச்ச நீதிமன்றம் கருத்து.

    நாட்டில் ஏழைகளின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி, வேறு எங்கோ சென்று கொண்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கருத்து தெரிவித்துள்ளது.
    கட்டுமானத் தொழிலாளர் நலனுக்கான தன்னார்வ அமைப்பு ஒன்று தாக்கல் செய்த பொதுநல மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தலைமை கணக்குத் தணிக்கைத் துறை (சிஏஜி) சார்பில் ஆஜரான அரசு துணைத் தலைமை வழக்குரைஞர் மணீந்தர் சிங்கிடம் நீதிபதிகள் கூறியதாவது:
    ஏழைகளின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.26,000 கோடியில் ரூ.5,000 கோடி எப்படிச் செலவானது என்பதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. அந்த நிதி, தேநீருக்கும், உணவுக்கும் செலவு செய்யப்படவில்லை என்பதை அரசு உறுதிசெய்தாக வேண்டும்.
    ஏழைகளின் நலனுக்கு ஒதுக்கப்படும் நிதி, அவர்களுக்காக செலவிடப்படுகிறது என்று நம்பப்படுகிறது. ஆனால், அந்த நிதி, வேறு எங்கோ சென்றுகொண்டிருக்கிறது என்று நீதிபதிகள் கூறினர்.
    அப்போது குறுக்கிட்டுப் பேசிய மணீந்தர் சிங், ''அந்த நிதி வேறு எங்கும் செல்லவில்லை; அவை மாநில அரசுகளிடம் உள்ளன'' என்றார்.
    அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ''அரசு தரப்பின் பதில் அதிர்ச்சி தருகிறது. இந்தப் பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வைக் கண்டுபிடித்தாக வேண்டும்'' என்றனர்.
    அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கொலீன் கோன்சால்வ்ஸ், ''ஏழைகளின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் பெருமளவு நிதி, வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த நிதி, வேறு நோக்கங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது'' என்றார்.
    அதையடுத்து, ரூ.5,000 கோடி எப்படிச் செலவானது என்பதை ஆய்வு செய்து 2 வாரங்களில் அறிக்கை அளிக்குமாறு சிஏஜிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad