Header Ads

  • BREAKING



    காலி குடங்களுடன் தண்ணீர் தேடி அலையும் கிராம மக்கள்.

    கடுமையான வறட்சியால் குடிக்கத் தண்ணீர் இன்றி அல்லல்படுகின்றனர் சேலம் மாவட்டம் அசிராமணி பேரூராட்சி மக்கள். ஒரு குடம் குடிநீருக்கு தவியாய்த் தவிக்கும் அப்பகுதி மக்களின் அவல நிலையை பற்றிய செய்தித் தொகுப்பு இது.
    கடும் வறட்சியால் கருகிப்போன மரங்கள், காலிக் குடங்களுடன் தண்ணீர் தேடி அலையும் கிராம மக்கள்.
    ஒற்றையடிப் பாதையாய் செல்லும் அந்த வழி சென்றடையும் இடம், தண்ணீர்ப் பஞ்சம் தலை விரித்தாடும் சங்ககிரியை அடுத்த, எல்லப்பாளையம் பகுதி…. 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில், கடுமையான வறட்சி காரணமாக குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். இரண்டு ஆழ்துளை கிணறுகள், இரண்டு சின்டெக்ஸ் டேங்குகள், பஞ்சாயத்து கிணறு என அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனதால், குடிநீருக்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு வரும் காவிரி குடிநீரையே நம்பியிருந்தனர். ஆனால் அதுவும் கடந்த சில மாதங்களாக வராமல் போனதால், குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல்  தவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.
    சிறியவர்கள் முதல் தள்ளாடும் முதியவர்கள் வரை காலி குடங்களுடன் ஐந்து கிலோமீட்டருக்கும் மேல் சென்று, ஒருகுடம் தண்ணீருக்காக, நாள் முழுவதும் தவம் கிடப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள். அரசிராமனி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்த பின்பு ஒருமுறை மட்டுமே டிராக்டரில்  தண்ணீர் கொண்டு வந்து வழங்கியதாகவும், பின்னர் தங்கள் நிலையை கண்டுகொள்ளவேயில்லை எனவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    இப்பகுதியின் பிரதான தொழிலான விவசாயமும், பனைவெல்லம் தயாரிப்பும் கடுமையான வறட்சியால் பாழாகிப்போக, குடிக்க கூட ஒருகுடம் தண்ணீர் கிடைக்காததால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக கண்ணீர் வடிக்கிறார் இப்பகுதி பெண்மணி…தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊருக்கு அருகிலேயே உள்ள தங்கள் பகுதிக்கு, போதிய அளவு தண்ணீர் கொடுக்காவிட்டாலும், அன்றாடம் குடிப்பதற்காவது தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் இப்பகுதி மக்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad