Header Ads

  • BREAKING



    கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வணிகக் கப்பல்: இந்திய, சீன கடற்படையினர் இணைந்து மீட்பு.

    ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வணிகக் கப்பலை இந்திய, சீன கடற்படையினர் இணைந்து மீட்டனர்.
    இதுதொடர்பாக, இந்திய கடற்படையின் செய்தித் தொடர்பாளர் டி.கே.சர்மா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: ஓஎஸ் 35 என்ற வணிகக் கப்பல் மலேசியாவின் கெலாங் பகுதியிலிருந்து அரபு நாடான ஏமனைஒட்டியுள்ள ஏடன் வளைகுடா நோக்கி சனிக்கிழமை இரவு சென்றது. அந்தக் கப்பலில் 19 ஊழியர்கள் இருந்தனர். கப்பல் ஏடன் வளைகுடாவை நெருங்கியபோது, சோமாலி கடற்கொள்ளையர்கள் சிலர் அந்தக் கப்பலை சுற்றி வளைத்தனர்.
    இந்நிலையில், ஓஎஸ் 35 கப்பலில் இருந்தவர்கள் இதுகுறித்து பிரிட்டனிலுள்ள கடல்வழி வர்த்தக அமைப்புக்குத் தகவல் தெரிவித்தனர்.
    அந்த அமைப்பினர் ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த இந்திய, சீன கடற்படையினருக்கு தகவல் அளித்தனர்.
    இதையடுத்து, இந்திய கடற்படையினர் ஐஎன்எஸ் மும்பை, ஐஎன்எஸ் தர்காஷ் ஆகிய 2 போர்க் கப்பல்களை அங்கு அனுப்பி வைத்தனர். சீன கடற்படையினர், யூலின் என்ற போர்க் கப்பலை அனுப்பினர். இந்நிலையில், போர்க் கப்பல்கள் நெருங்குவதைக் கண்ட கடற்கொள்ளையர்கள் ஓஎஸ் 35 கப்பலிலிருந்து வெளியேறி தப்பினர். முன்னதாக, ஓஎஸ் 35 கப்பலிலிருந்த ஊழியர்கள் பாதுகாப்பு அறைக்குள் சென்று அறையைப் பூட்டிக் கொண்டனர்.
    இதனிடையே, இந்திய கடற்படை சார்பில் ஹெலிகாப்டர் ஒன்று ஓஎஸ் 35 கப்பலின் மேல்தளத்தில் இறக்கப்பட்டது. பின்னர், அந்தக் கப்பலில் கொள்ளையர்கள் யாரேனும் உள்ளார்களா என்று சோதனையிடப்பட்டது. கொள்ளையர்கள் வெளியேறிய தகவல் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு அறையிலிருந்த கப்பல் ஊழியர்கள் வெளியே வந்தனர்.
    தொடர்ந்து இந்திய, சீன கடற்படையினர் பரஸ்பரம் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர் என்றார் டி.கே.சர்மா. தலாய் லாமாவின் அருணாசலப் பிரதேச சுற்றுப் பயணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்தியா - சீனா இடையே கருத்து வேறுபாடுகள் நிலவிவரும் சூழலில், இரு நாட்டு கடற்படையினரும் இணைந்து கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பலை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad