Header Ads

 • BREAKING  சென்னை துறைமுகம் வந்தடைந்தது "ஐ.என்.எஸ். சென்னை' போர்க் கப்பல்.

  இந்திய கடற்படை போர்க் கப்பலான "ஐ.என்.எஸ். சென்னை' சனிக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்ததடைந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் கப்பலை கொடியசைத்து வரவேற்றனர்.

  அதன் பின்னர் கப்பலின் சிறப்பு, வருகையின் நோக்கம் குறித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதி கடற்படை அதிகாரி அலோக் பட்னாகர் கூறியது,
  "ஐ.என்.எஸ். சென்னை' இந்திய கடற்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணைக்கப்பட்டது. மும்பையில் உள்ள பொதுத் துறை நிறுவனமான மஜகான் ஷிப் யார்டில் கட்டப்பட்ட இக்கப்பலில் இதர போர்க் கப்பல்களில் உள்ளதைப் போன்று ஏவுகணைகள், கண்ணிவெடிகளை அழித்தல், பீரங்கி, ரேடார் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அணு, உயிரி, வேதியியல் கருவிகள் பங்களிக்கும் போர்களிலும் இக்கப்பலைப் பயன்படுத்த முடியும். சுமார் 7,500 டன் எடை கொண்ட இக்கப்பல் 164 மீட்டர் நீளம், 17 மீட்டர் அகலம், 18 மீட்டர் உயரம் கொண்டது. இந்தக் கப்பலில் தற்போது 330 வீரர்கள் பணியில் உள்ளனர். 
  முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்ட இக்கப்பலில் இணைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கருவிகள், உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.
  மேலும் 40 கப்பல்கள்: கடற்படை மேற்கு பிரிவின் கட்டுப்பாட்டில் "ஐ.என்.எஸ். சென்னை' பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நல்லெண்ணப் பயணமாகவே தற்போது கப்பல் சென்னைக்கு வந்துள்ளது. மேலும், சோதனை இயக்கத்தில் இருந்தபோது 2015 -ஆம் ஆண்டு, சென்னை மாநகரம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், நிவாரணப் பொருள்களை ஏற்றிக் கொண்டு "ஐ.என்.எஸ். சென்னை' சென்னைத் துறைமுகம் வந்து சென்றுள்ளது. இந்தியக் கடற்படை தொடர்ந்து நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. பழைய கப்பல்கள் நீக்கப்பட்டு புதிய மற்றும் கூடுதல் கப்பல்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. தற்போது மேலும் 40 சிறிய, பெரிய ரக அதிநவீன போர்க் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன.
  முதல்வர் பார்வையிடுகிறார்: சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பலை, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை பார்வையிடுகிறார். இதனையடுத்து, இக்கப்பலின் ஒத்திகை நிகழ்ச்சி நடுக்கடலில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கப்பலைப் பார்வையிட ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றார் அலோக் பட்னாகர்.
  பேட்டியின்போது கப்பலின் கேப்டன் பிரவீன் நாயர், கடற்படை அதிகாரிகள் மகாதேவன், பிரசாந்த் மிஸ்ரா, பாதுகாப்பு அமைச்சக மக்கள் தொடர்பு அதிகாரி சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
  இதனையடுத்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில், சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெரீனா கடற்கரை அருகில் (கண்ணகி சிலை எதிர் பகுதி) கடலில் "ஐ.என்.எஸ். சென்னை' நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது கப்பல் முழுவதும் ஒளி அலங்காரம் செய்யபட்டிருந்தது. இதனால் மெரீனாவுக்கு வந்திருந்த பொதுமக்கள் கூடுதல் அழகுடன் கப்பலைக் கண்டு களித்தனர்.

  சென்னை பெயர்க் காரணமும், மஞ்சம்பட்டி காட்டெருமையும்...

  சுதந்திரப் போராட்ட வீரர்கள், மன்னர்கள், முக்கிய நதிகளின் பெயர்கள் போர் மற்றும் ரோந்துக் கப்பல்களுக்குச் சூட்டப்படுவது வழக்கம். இதில் தற்போது முக்கிய நகரங்களின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி கொச்சி, கொல்கத்தா ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவதாக சென்னை மாநகரத்தின் பெயர் இப்போர்க்கப்பலுக்குச் சூட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் தலைநகர் சென்னையின் பெருமைகள் இக்கப்பலில் பறைசாட்டப்பட்டுள்ளன.
  "ஐ.என்.எஸ். சென்னை' கப்பலின் அடையாளச் சின்னத்தில் திருப்பூர், தேனி மாவட்டத்தை உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் காணப்படும் அரிய வகை காட்டெருமை, சென்னை மாநகர வரைபடம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
  மேலும் மஞ்சம்பட்டி காட்டெருமையின் கட்டுக்கோப்பான உடலமைப்பு, துணிச்சல், போர்க்குணம் உள்ளிட்ட விவரங்களும், சென்னை மாநகரத்தின் பெருமைகள் குறித்தும் கப்பலின் பல்வேறு இடங்களிலும், விளக்கக் குறிப்பேட்டிலும் விரிவாக விளக்கப்பட்டிருப்பது சிறப்பு அம்சமாகும்.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad