இரட்டை இலைக்கு பேரம்: டிடிவி தினகரன் பேசிய ஆடியோ பதிவு கிடைத்துள்ளது- தில்லி காவல்துறை.
புது தில்லி: இரட்டை இலைச் சின்னத்தை தங்கள் அணிக்கே வழங்கக் கூறி பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் பேசிய ஆடியோ பதிவு கிடைத்திருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரை தில்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அப்போது, தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசி இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தர உதவுவதாக தான் கூறியிருப்பதையும், அதற்கு, டிடிவி தினகரனிடம் ரூ.60 கோடி அளவுக்கு பேரம் பேசியதாக சுகேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், அவரது அறையில் இருந்து ரூ.1.30 கோடியையும், இரண்டு கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தற்போது மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரா சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
இது குறித்து தில்லி காவல்துறையினர் கூறுகையில், சுகேஷ் சந்திராவிடம் டிடிவி தினகரன் பேசியதற்கான ஆடியோ பதிவுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை நடப்பதாகவும், சுகேஷ் சந்திரா, தேர்தல் ஆணைய அதிகாரிகள் யாரையாவது தொடர்பு கொண்டு பேசியுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட தினகரனும், பன்னீர்செல்வம் அணியும் இரட்டை இலைச் சின்னத்தை சொந்தம் கொண்டாடியதால், தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது.
இதையடுத்து ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவிருந்த இடைத் தேர்தலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான், இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தர டிடிவி தினகரன் 60 கோடி அளவுக்கு இடைத்தரகர் என்று கூறப்படும் சுகேஷ் சந்திராவிடம் பேரம் பேசியதாக, தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை