Header Ads

 • BREAKING  அட்வெஞ்சர் டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிறது, சென்னை நன்மங்கலம் வனப்பகுதி!


  சென்னையில் வேளச்சேரி, தாம்பரத்துக்கு இடையில் இருக்கும் 'நன்மங்கலம் ரிசர்வ் ஃபாரஸ்ட் பகுதி' பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று கிடந்தது. தற்போது தமிழ்நாடு டூரிஸம் டிபார்ட்மெண்ட் நன்மங்கலம் புராஜெக்ட்டை எக்கோ டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்ற முடிவெடுத்திருக்கிறது. இந்த முயற்சி ஒரே தடவையில் நிறைவேற்றக் கூடியதல்ல என்பதால் இரண்டு நிலைகளாக திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. சென்னையை சிங்காரச் சென்னையாக்கும் முயற்சிகளில் ஒன்றான இது தமிழ்நாடு அரசின் புதுமையான முயற்சித் திட்டங்களின் அடிப்படையில் ஏற்றம் பெற உள்ளது. இதற்காக 1.2 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா அமைச்சகம் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

  320 ஹெக்டேரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த வனப்பகுதியில் முன்பிருந்த யுரேஷியன் பருந்து ஆந்தைகள், சூரியப் பறவைகள், 400 க்கும் மேற்பட்ட ஊர்வன வகைகள் மற்றும் பூச்சியுண்ணும் தாவர வகைகள் என கானுயிர்கள் செழிப்பாக இருந்தன. ஆனால் 1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. பசுமைப் புரட்சிக்கும் பிறகான காலகட்டத்தில் இந்தியாவுக்குள் அதிகமாக ஊடுருவத் தொடங்கிய கருவேல மரங்கள் மற்றும் யூகலிப்டஸ் மரங்களின் பெருக்கமானது நன்மங்கலம் காடுகளில் மட்டுமே வளரும் சிறப்பான சில நேட்டிவ் வகை தாவர இனங்களை முற்றிலும் அழித்து ஒழித்தன.

  நீர் உறிஞ்சும் மரங்களால் மட்டுமல்ல இந்த வனப்பகுதியில் இருக்கும் ஏழு பெரிய கல்குவாரிகளாலும் நன்மங்கலம் வனத்தின் இயற்கை எழில் குறையத் தொடங்கியது. 1974 ல் இந்த வனப்பகுதி தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின் குவாரிகளுக்காக சுரங்கம் தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு மரங்களை வெட்டக் கூடாது, இயற்கைக்கு ஊறு விளைவிக்கக் கூடாது, வனத்தின் பசுமையை சீரழிக்கக்கூடாது எனும் கோஷம் இப்பகுதிகளில் அதிகமாக ஒலிக்கத் தொடங்கியது.

  கருவேலமரங்களையும், யூகலிப்டஸ் மரங்களையும் வேரோடி வெட்டி நீக்கி விடலாம், கல் குவார்களுக்குத் தடை விதித்து விடலாம், ஆனால் தற்போது பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சென்னையின் அனைத்துப் பகுதிகளையும் ஆக்ரமித்துள்ள ரியல் எஸ்டேட் பயங்கரத்திலிருந்து நன்மங்கலம் ஃபாரஸ்ட் பகுதியைக் காப்பது தான் பெரும் சவால். அந்த சவாலான வேலை உச்ச கட்டத்தை அடையும் முன் வனத்துறை விழித்துக் கொண்டதைப் பாராட்டியே ஆக வேண்டும்.

  அதன் விளைவு தான் நன்மங்கலம் வனப்பகுதி மறுசீரமைப்பு மற்றும் மாற்றம் எனும் இரண்டு படிநிலைகளைக் கொண்ட வளர்ச்சித் திட்டம். முதற்கட்டமாக இந்தப் பகுதியில் தனியார் ஆக்ரமிப்புகள் அகற்றப் பட்டு, பூமியில் நீர் உறிஞ்சும் மரங்களை அகற்றுதல், குவாரிகளுக்கு சுரங்கம் தோண்டத் தடை உள்ளிட்ட வேலைகளைத் துவக்கி நன்மங்கலத்தை சூழலியல் சார்ந்த எக்கோ டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.

  இது குறித்து வனத்துறை அதிகாரி ஆர்.லக்ஷ்மண் குமாரிடம் பேசுகையில், வனத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையில் இந்த வனப்பகுதி முழுதும் பரவியிருந்த அந்நியச் செடிகளும், மரங்களும் அகற்றப்பட்டுக் கொண்டிருப்பதாகவும். மண்ணோடு நெருக்கமான பந்தமுள்ள நமது பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட மரங்களான நீர் மருது, அர்ஜூனா, கிர்னி, அத்தி மரம், அரச மரம் உள்ளிட்டவை சுமார் 11 ஹெக்டேர் பரப்பளவில் நடப்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் 7 பெரிய குவாரிகள் தடை செய்யப்பட்டதால் அவற்றுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அனைத்தும் மழை நீர் தேக்கி வைக்க உதவும் நீராதாரங்களாக பயன்படுத்தப் படவிருப்பதாகவும். நமது சொந்த மண் தாவரங்களின் விதைகளுக்கு இபோதைக்கு இந்த நீராதாரங்கள் மூலம் கிடைக்கும் நீர் போதுமானதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

  அதுமட்டுமல்ல நன்மங்கலத்தைப் பொறுத்தவரை சென்னைவாசிகளுக்கு மற்றுமொரு நற்செய்தி; இந்த வனப்பகுதியை வனத்துறையினர் அட்வெஞ்சர் டூர் விரும்பும் பயணிகளுக்கு ஏதுவாக ஒரு பகல் , ஒரு இரவு வனத்தின் உள்ளேயே தங்கி மரம் ஏறுதல், மலை ஏறுதல், இரவு நேர கேம்பிங் வசதி, மற்றும் இரவில் தகுந்த பாதுகாப்புகளுடன் வனத்துறையினரின் வழகாட்டுதலுடன் காட்டை சுற்றிப் பார்த்தல். உள்ளிட்ட வசதிகளையும் சேர்த்து மாறுதல் செய்ய உள்ளது.

  இந்த மாற்றங்களை எல்லாம் செய்து முடித்ததும், வனப்பகுதியின் உள்ளே ஜங் ஃபுட் வகைகளுக்கு தடை விதிக்கும் முகாந்திரமாக மகளிர் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் வனப்பகுதியின் உள்ளே ஆர்கானிக் உணவுப் பொருட்களை விளைவிக்கச் செய்யும் முயற்சிகளையும் செய்யவிருக்கிறதாம். அதுமட்டுமல்ல ஆர்கானிக் உனவுப் பொருட்களை விளைவிப்பது எப்படி? விற்பனை செய்வது எப்படி? என்பது குறித்த பயிற்சி வகுப்புகளையும் இந்த வனப்பகுதியில் நடத்தி சுற்றுலாப் பயணிகளை கவரும் முயற்சி இருக்கிறதாம்.

  எது எப்படியானாலும், சென்னையில் அட்வெஞ்சர் ட்ரிப் செல்லவும், எக்கோ டூர் செல்லவும் தரமான ஒரு வனப்பகுதி விரைவில் புழக்கத்துக்கு வரவிருக்கிறது என்பது சென்னைவாசிகள் மட்டுமல்ல தமிழகத்திற்கும் இது ஒரு நற்செய்தியே. டூர் செல்ல விரும்புபவர்கள் இனிமேல் தங்களது லிஸ்டில் நன்மங்கலத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad