Header Ads

  • BREAKING



    டி.டி.வி.தினகரன் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீசார் நோட்டீஸ்


    டி.டி.வி.தினகரன் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில், அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர ராவ் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு டி.டி.வி தினகரன் 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் சுகேசை கைது செய்துள்ள போலீசார் அவர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் இருந்து சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சுகேஷை காவலில் எடுத்து விசாரித்து வரும் போலீசார், அவரிடம் இருந்து பெறப்படும் கூடுதல் விவரங்கள் மூலம் டி.டி.வி.தினகரனை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
    இதனால், இன்று அல்லது நாளை டெல்லி போலீசார் சென்னை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டி.டி.வி.தினகரன் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில், டெல்லி மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். டி.டி.வி.தினகரன் வெளிநாட்டு குடியுரிமை உள்ள நபர் என்பதால், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாக, டெல்லி குற்றப்பிரிவு இணை ஆணையர் பிரவீர் ரஞ்சன் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் கூறியுள்ளது.
    டி.டி.வி.தினகரன் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக, அவரது நெருங்கிய உதவியாளர் மூலம் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில், டி.டி.வி.தினகரன் விமான நிலையங்களுக்கு வந்தால் தகவல் கொடுக்குமாறு, நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் பிரவீர் ரஞ்சன் கூறியுள்ளதாக அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad