Header Ads

  • BREAKING



    விழுப்புரத்தில் இரவு நேரங்களில் தொடரும் மின் வெட்டு: மக்கள் கடும் அவதி.

    விழுப்புரம் நகரில், கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் தொடரும் மின்வெட்டால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    விழுப்புரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 11 ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. பல மணி நேரம் நீடித்த மின்வெட்டால் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். இது குறித்து புகார் தெரிவிக்க பலரும் மின்வாரியத்தைத் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால், விழுப்புரம் சிக்னல் அருகிலில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் தெரிவித்துச் சென்றனர். பின்னர், பழுது சீர்செய்யப்பட்டு நள்ளிரவு 12.40 மணி அளவில் மின் விநியோகம் சீரானது. அதன் பிறகு, கடந்த ஒரு வாரத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும் இதனால் நிம்மதியாக தூங்கமுடியவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    குறிப்பாக, மின்வெட்டு காரணமாக திருச்சி சாலை, சுதாகர் நகர், கே.கே. நகர், என்.ஜி.ஜி.ஓ. நகர் போன்று நகரின் முக்கிய குடியிருப்புப் பகுதிகள், ஜானகிபுரம், சாலாமேடு போன்ற பகுதிகளும் இருளில் மூழ்குகின்றன. ஞாயிற்றுக்கிழமை இரவு விக்கிரவாண்டி பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின் விநியோகம் தடைபட்டது.

    திடீர் பழுதால் மின்வெட்டு: இவ்வாறு முன்னறிவிப்பில்லாமல் தொடரும் மின் வெட்டு குறித்து விழுப்புரம் மின் விநியோக மேற்பார்வைப் பொறியாளர் சீனுவாசனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
    கோடையில் மின் நுகர்வு அதிகமாக இருக்கும் என்பதால், மின் நிறுத்தம் செய்யப்படுவதில்லை. விழுப்புரம் நகருக்குத் தேவையான மின்சாரம் முழுமையாகக் கிடைக்கிது. பழுது காரணமாகவே மின் தடை ஏற்படுகிறது. விழுப்புரம் பகுதிக்கு மட்டும் 50 எம்விஏ அளவு கொண்ட 2 மின் மாற்றிகளும், 12 துணை மின் நிலையங்களும் உள்ளன. இதில், ஜானகிபுரம் துணை மின் நிலையத்தில் அவ்வப்போது ஏற்படும் பழுது காரணமாக மின்தடை ஏற்படுகிறது.

    கடந்த வாரம் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டதுபோதும், மீண்டும் திடீரென பழுது ஏற்படுகிறது. ஆகையால், அந்தப் பகுதியில் மின் கம்பிகளை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில், மின் விநியோகம் தடையின்றி கிடைக்கும்.

    புகார் தெரிவிக்க: இரவு நேரங்களில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்க 04146 222162 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad